தேர்தல் நேரத்தில் வந்த தலைவி டிரெய்லர்: ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகி உள்ளது.
Advertisment
திரைப்பட நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்து, அதிமுகவை மீட்டெடுத்து தமிழக முதல்வராகி தமிழ மக்களால் அம்மா என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார். தமிழக அரசியலில் அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய பிம்பத்துக்கான செல்வாக்கு இருந்து கொண்டுதான் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் அதிமுகவினர் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் திருவிழாவில் பரப்பரப்பாக இருக்கும் தமிழக அரசியலின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் அவருடைய கம்பீரத்தை வெளிப்படுத்தும் விதமாக நடித்துள்ளார். தலைவி டிரெய்லர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடித்துள்ளார். அதே போல, தலைவி படத்தில் இந்திராகாந்தி பாத்திரமும் இடம்பெற்றுள்ளது டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைவி டிரெய்லர் வெளியாகி 10 மணி நேரத்தில் தமிழ் டிரெய்லரை 1.1 மில்லியன் பார்வையாளர்களும், இந்தி டிரெய்லரை 5.9 மில்லியன் பார்வையாளர்களும் தெலுங்கு டிரெய்லரை கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.