Thalapathy 64 : தளபதி விஜய் மிக அதிக ரசிகர்களை மட்டும் பெற்றிருக்கவில்லை, தனது வயது ஒருபோதும் முகத்தில் தெரியாத உடலமைப்பையும் பெற்றிருக்கிறார். அவரது தற்போதைய தோற்றத்தை பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றத்துடன் தாராளமாக ஒப்பிடலாம். அப்படி ஒப்பிடும் போது மிகச்சில மாறுதல்களை மட்டுமே நம்மால் கண்டறிய முடியும். விஜய் தனது 38-வது வயதில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார்.
இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'தளபதி 64' படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார் விஜய். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அடையாள அட்டையுடன், மெஸ்ஸியான ஹேர்ஸ்டைலில் காட்சியளிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விரிவுரையாளராகவும் அவர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் மாணவராக நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தளபதி 64-ல் கூடுதல் எழுத்தாளராக பணியாற்றும் இயக்குநர் ரத்ன குமார், ”பயணம், மீட்டிங், ஸ்கிரிப்டிங் போன்ற காரணங்களால் இன்று டெல்லியில் இருக்க முடியவில்லை. "மச்சி பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா" என எனது பிறந்தநாளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மொபைலில் இருந்து அழைத்து, அவரைப் போலவே மிமிக்ரி செய்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் விஜய். வாழ்வது ஒர்த்தாக உள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.