Thalapathy Vijay: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. இயக்குநர் அட்லீ - நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பிகில்’ ஆடியோ லாஞ்ச் என்றதுமே, இதில் விஜய் என்ன பேசுவார், என்ன குட்டிக்கதை சொல்வார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. இதற்கு முன்பு ‘மெர்சல்’ ஆடியோ லாஞ்சுக்கு மெரூன் (சிவப்பு) கலர் சட்டையும், ‘சர்கார்’ ஆடியோ லாஞ்சில் நீல நிற சட்டையும் அணிந்து வந்தார் விஜய். ஆகையால் ‘பிகில்’ ஆடியோ லாஞ்சில் கறுப்பு நிற சட்டை அணிந்து வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கறுப்பு நிற சட்டையில் வருகை புரிந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் விஜய்.
விழா ஆரம்பித்து 4 மணி நேரம் கழித்து தான் மேடை ஏறினார். அவர் பாடிய ‘வெறித்தனம்’ பாடலை மேடையில் விஜய் பாட, அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய விஜய், “வாழ்க்கை என்பதும் ஃபுட்பால் மேட்ச் மாதிரி தான். நாம கோல் போட முயற்சி பண்ணும்போது, அத தடுக்க ஒரு கூட்டம் வரும். சில சமயம் நம்ம கூட இருக்கவனே சேம் சைடு கோல் போட்டுருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க. புடிச்சா எடுத்துக்கோங்க இல்லைன்னா விட்டுருங்க. அரசியல்ல புகுந்து விளையாடுங்க, ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க.
முதல்ல ’வெறித்தனம்’ பாட்ட பாடி ரஹ்மான் சாருக்கு ஒரு சாம்பிள் அனுப்புனேன். ஆனா அவர் கிட்ட இருந்து உடனே பதில் எதுவும் வரல. அவர் மும்பைக்கு கிளம்பி போய்ட்டாரு. சரி நான் பாட வேண்டாம்னு அவர் சொல்லிட்டாரு போலன்னு நான் நெனச்சேன். அப்புறம் அட்லீ கால் செய்து பண்ணி சொன்ன பிறகு தான் ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு என்ன கூப்பிட்டது எனக்கு தெரியவந்தது. அட்லீ தான் ரொம்ப என்கரேஜ் பண்ணி, அண்ணே வாங்கண்ணே போலாம்ண்ணேன்னு கூட்டிட்டு போனாரு. அங்க போனதும் ரஹ்மான் சார் நல்லா பாடிருக்கீங்க, ஆரம்பிக்கலாமான்னு? கேட்டாரு. எனக்கு ஒண்ணுமே புரில.
உழைச்சவங்கள மேடை ஏத்தி அழகு பாக்குற முதலாளி ரசிகர்கள் தான். ஒரு நாள் எம்.ஜி.ஆர் கார்ல போய்ட்டு இருக்கும் போது, கூட இருந்தவர் கலைஞர பத்தி தப்பா பேசுனதுக்காக, அவர கார்ல இருந்து இறக்கி விட்டிருக்காரு எம்.ஜி.ஆர். எதிரியா இருந்தாலும் மதிக்கணும். என் ஃபோட்டோவ ஒடைங்க, பேனர கிழிங்க, ஆனா என் ரசிகன் மேல கை வைக்காதீங்க. பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான், அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள்.
சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். யார் மீது பழிபோடுறதுன்னு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடிச்சவங்க மேலயும் பழிபோடுறாங்க. யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும்” என விஜய் கூறியதும், ரசிகர்களின் கைத்தட்டலும், ஆரவாரமும் விண்ணை பிளந்தது!
இது ஒருபுறமிருக்க, அடிக்கடி ஆன்லைனில் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே சண்டை வெடிக்கும். இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள். இப்படியான சண்டைகளை கைவிடும் படி எத்தனையோ முறை தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விஜய். ஆனால் அஜித்தோ இவற்றைப் பற்றி எல்லாம் கண்டுக் கொள்வதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிறார். அவ்வப்போது எழும் இந்த சண்டையால் பொறுமையை இழந்த விஜய், அஜித் ரசிகர்களுக்கான எச்சரிக்கை மணியை சூசகமாக அடுத்துள்ளதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.