Bigil Audio Launch Function: மெர்சல் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர் விவேக் எழுத, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண்ணே’ பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விஜய் பாடியிருக்கும், ‘வெறித்தனம்’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் முதல் பாடலான இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ‘உனக்காக’ எனத் தொடங்கும் மெலடி பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு விஜய் – அட்லீ – ரஹ்மான் கூட்டணியில் அமைந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ‘நீ தானே நீ தானே’ பாடலைப் போன்று அன்பை உணர்த்தும் விதத்தில் ‘உனக்காக’ பாடல் இருப்பதால், பல ஜோடிகளின் ப்ளே லிஸ்டில் இப்பாடல் இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய்யின் ‘பிகில்’ பட ஆடியோ லாஞ்ச் விழா நடக்கவிருக்கிறது. இந்த இசைவெளியீட்டு விழாவில், ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு ரஹ்மான் இசையில், மேடையில் பாடி அசத்த உள்ளனர் பாடகர்கள். அந்த வகையில், ’வெறித்தனம்’ பாடலை பாடியுள்ள விஜய்யும், மேடையில் பாடி ரசிகர்களுக்கு வேற லெவல் உற்சாகத்தைக் கொடுப்பார் எனத் தெரிகிறது. இருப்பினும் இதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறதாம் படக்குழு.
இது வரை மேடையில் விஜய்யின் பேச்சை மட்டுமே கேட்டு ரசித்த ரசிகர்களுக்கு, இன்றைய நிகழ்ச்சி லைஃப் டைம் மெமரியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!