Master Single Track : ’பிகில்’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கடந்த வாரம் அவரது வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த வாரம் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி ரெய்டு சோதனையின் போது, படபிடிப்பு தளத்திலிருந்து உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் விஜய். அதன் பிறகு நிலக்கரி சுரங்கத்தில் படபிடிப்பு நடத்த அனுமதியளித்ததைக் கண்டித்து, பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெய்வேலியில் விஜய் ரசிகர்களின் பெருந்திரளாகக் கூடினர்.
Advertisment
Advertisements
ரசிகர்களைக் கண்ட விஜய் ஞாயிற்றுக் கிழமை அங்கு நின்றிருந்த வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்தார். அதன் பிறகு திங்கட்கிழமை மாலை பஸ் மீது ஏறி அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் பயங்கர வைரலானது. இந்த உற்சாகத்தில் ‘மாஸ்டர்’ அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தேனில் ஊறிய ஜாமூனாய் வந்து சேர்ந்தது அந்த தித்திப்பான செய்தி.
அதாவது பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, அன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசை அனிருத். மேடைகளில் விஜய் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதற்கேற்றவாறு ஃபர்ஸ்ட் சிங்கிளும் ‘ஒரு குட்டிக்கதை’ என்றே உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் சொல்லும் அந்தக் குட்டிக்கதைகளில் பெரும்பாலும் அரசியல் நெடி இருக்கும். அந்த வகையில் அவர் தற்போது பாடலின் மூலம் சொல்லப்போகும் குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கா, அல்லது காதலர் தினத்தன்று வெளியாவதால் அது காதலர்களுக்கா? முரட்டு சிங்கிள்ஸுக்கா என்ற எதிர்பார்ப்பு வானளவு எகிறிக் கிடக்கிறது.