சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் பிரிவில் நடிகர் விஜய் பெயர் இடம் பெற்றுள்ளது.
அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் தொடர்ந்து இந்திய அளவில் இப்படி சாதனைகளை செய்து வரும் என்று படக்குழுவே எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள். ஆனால் படம் வெளியானதில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மெர்சல் திரைப்படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது.
2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தில் இடம்பெறும் வசனங்கள் தொடங்கி, படத்தின் தலைப்பு வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து விட்டு ஒரு வழியாக தீபாவளி அன்று திரையிடப்பட்டது. திரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களை படத்தை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் திரைப்படம் ‘எவர் டை ஃபேவரெட்’ படமாக அமைந்து விட்டது.
இந்நிலையில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, 2014-ம் ஆண்டு முதல் சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிவருகிறது. சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.பாலிவுட் நடிகர்களின் பெயர் இடம்பெறாமல் இந்தியாவிலிருந்து நடிகர் விஜய் மட்டுமே தேர்வாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-56-1024x684.jpg)
உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
IARAவின் இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்களிக்கும் கடைசி தேதி ஆகஸ்ட் 10ஆம் தேதியாகும்.