Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிகர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி வரைக்கும் வசூல் செய்து விட்டதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தற்போது தனது 64-வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் விஜய். தனது முதல் படமான ’மாநகரம்’ படத்திலேயே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றார் லோகேஷ். அடுத்ததாக அவர் இயக்கிய ‘கைதி’ தீபாவளியன்று, ‘பிகில்’ திரைப்படத்துடன் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இதற்கடுத்த படமான ‘தளபதி 65’ படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் அதிகமானது. மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது அட்லீ இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு வெளியான மகிழ் திருமேனியின் ‘தடம்’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையே அக்டோபர் மாதம் தளபதி 64 ஷூட்டிங் பிரேக்கில், மகிழ் திருமேனியிடம் விஜய் கதை கேட்டதாகவும், கேட்டு முடித்த விஜய் இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தளபதி 64 படத்தில் புரபஸராக நடிக்கும் விஜய் தற்போது ஒரு நீண்ட ஷெட்யூல் படபிடிப்பில் டெல்லியில் இருக்கிறார். இந்தப் படம் ஏப்ரலில் வெளியானதும், 2020 ஜூன் மாதம் விஜய் - மகிழ் திருமேனி படத்தின் படபிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதற்கிடையே இந்த செய்தியை “Thalapathy6522” என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்!