scorecardresearch

விஜய்யா? விஜய் சேதுபதியா? ரெய்டு விடும் மாஸ்டர் – விமர்சனம்

Master Movie Review Tamil திரைப்படம் முழுவதும் ஒளியும் ஒலியும் அதிகமாகப் பேசுகின்றன என்றே சொல்லலாம்.

Thalapathy Vijay Vijay Sethupathy Lokesh Kanagaraj Master Movie Review Tamil News
Master Movie Review

Vijay Sethupathy Vijay Master Movie Review : தன் வித்தியாசமான படைப்புகளால் பெருகி வரும் இளம் இயக்குநர்கள் மத்தியில் தனக்கென்ற தனி அடையாளத்தைப் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். கதையில் மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் வசனங்களிலும் மாஸ் காட்டிவரும் லோகேஷின் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரண்டு சூப்பர் மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதுதான் தாமதம், மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு ஆரம்பமானது. விஜய் ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் என தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் அப்பொழுதிலிருந்தே ‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

பரவும் கொரோனா காரணத்தினால் தியேட்டரில் இந்த படம் வெளியாகுமா என்கிற சந்தேகத்தை விளக்கி 50 சதவிகித இருக்கைகளோடு இன்று ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது. கல்லூரியில் பணியாற்றும் மதுவுக்கு அடிமையான பேராசிரியராக வரும் விஜய், கல்லூரியில் நடைபெறும் ஓர் சலசலப்புக் காரணமாகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பள்ளி முழுவதையும் தன்னுடைய கன்ட்ரோலில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, அங்கிருக்கும் சிறுவர்களை தன்னுடைய சட்ட விரோத செயல்களுக்கு உபயோகித்துக்கொள்கிறார். முற்பாதியில் மது போதகராக வலம்வந்துகொண்டிருந்த விஜய் சீர்திருத்தப்பள்ளியில் நடக்கும் தவறுகளை ரெய்டு விடும் வாத்தியாராகப் பிற்பாதியில் மாறுகிறார். இரண்டு மாஸ் ஹீரோக்களுக்குள் நடக்கும் போராட்டமே ‘மாஸ்டர்’.

மாஸ் ஹீரோக்களுக்கு இருக்கவேண்டிய அத்தனை எலிமென்ட்டுகளும் இந்தப் படத்தில் நிறைந்திருக்கிறது. லோகேஷ் பட சாயல் இதில் இல்லையென்றாலும், ஒருவகையில் ஏற்றுக்கொள்ளும் விதமாகவே திரைக்களம் அமைந்திருக்கிறது. ஜேடிக்கு (விஜய்) குளிர்ச்சியான நீலம், பவானிக்கு (விஜ சேதுபதி) அனல் பறக்கும் சிவப்பு என ஹீரோ மற்றும் வில்லன் இடம்பெறும் காட்சிகளை நிறத்தின் அடிப்படையில் வேறுபடச் செய்திருக்கும் விதம் அருமை. திரைப்படம் முழுவதும் ஒளியும் ஒலியும் அதிகமாகப் பேசுகின்றன என்றே சொல்லலாம். சீர்திருத்தப் பள்ளியினுள் கபடி காட்சி வடிவமைத்திருக்கும் விதம் கில்லி திரைப்படத்தையும் இடைவேளைக்கு முந்தைய காட்சி துப்பாக்கி திரைப்படத்தையும் நினைவுகூராமல் இல்லை. என்றாலும் ரசிக்கும் விதமாகவே இருக்கிறது.

விஜய் ஹீரோவாக இருந்தாலும் விஜய் சேதுபதியின் பங்களிப்பு, இருவருக்குமான முக்கியத்துவத்தை சரிசமமாகவே பகிர்ந்திருக்கிறார் இயக்குநர். ஹீரோவுக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தைப் பார்த்து வெகு நாள்கள் ஆகிவிட்டது என்கிற குறையைப் பூர்த்தி செய்திருக்கிறது இவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு. படத்திற்கு ஏற்ற வகையில் அர்ஜுன் தாஸின் நடிப்பு பாராட்டுக்குரியது. மகேந்திரன், ஆண்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷன், ஸ்ரீமன் உள்ளிட்ட பரீட்சையுமான முகங்கள் திரையில் தோன்றினாலும், அவர்களுடைய கதாபாத்திரம் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் நிதர்சனம். படத்தின் முன்னணி நடிகையான மாளவிகா மோகனனின் பங்களிப்பும் வலுவாக இல்லை. என்பது ஏமாற்றம்.

திரைக்கதைக்கு ஏற்ற பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் அனிருத். விஜயின் நடனம் பற்றி சொல்லவே தேவையில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் மொமென்ட்டுகள் நிறைந்த பாடல்களாகவே இருக்கின்றன. மொத்தத்தில், விஜய், விஜய் சேதுபதி மற்றும் லோகேஷ் ரசிகர்களின் பொங்கலுக்கான சிறப்பான பரிசாகவே அமைந்திருக்கிறது ‘மாஸ்டர்’.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy vijay vijay sethupathy lokesh kanagaraj master movie review tamil news