இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.
கதைக்களம் :
18வது நாற்றாண்டில் நடப்பது போல தான் கதை நகர்கிறது. ஆங்கிலேயர்கள் கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். இதனால் வட ஆற்காடு பகுதியில் உள்ள வேப்பூர் கிராமத்து மக்களின் உதவியை நாடுகிறார்கள்.
வேப்பூர் கிராம மக்களோ தங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள் அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர்தான் நாயகன் தங்கலான் (விக்ரம்). இதை பொறுத்துக்கொள்ளமுடியாத ஊர் ஜமீன்தார்கள் அவர்களின் பயிர்களுக்கு தீ வைக்கிறார்கள். ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற வேண்டும் என்றால் ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க உதவுவதே ஒரே வழி என நினைத்து அதற்கான வேலைகளை தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
தங்கலான் படத்தில் விக்ரமின் நடிப்பையும், படத்திற்கான அவரின் உழைப்பையும் பார்க்கும் போது உலக நடிகர்களில் இதுபோல நடிப்பை யாராவது வெளிப்படுத்தமுடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே ?. அந்த அளவிர்கு உயிரை கொடுத்து இப்படத்தில் நடித்துள்ளார். இதன்பிறகு இதுபோல ஒரு நடிப்பை விக்ரமே கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே. குறிப்பாக சண்டை காட்சிகளில் எல்லாம் மெய்சிலிர்க்கிறது. உலகின் பல உயரிய விருதுகள் விக்ரமிற்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் என ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஓரிரு காட்சிகளில் வரும் துணை நடிகர்கள் கூட படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை :
அதிகாரம் கொண்டவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பதையும், அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன் மக்களின் விடுதலைக்காக எவ்வாறு போராடுகிறான் என்பதை மையமாக வைத்து தன்னுடைய வழக்கமான பாணி இல்லாமல் யதார்த்தமிக்க உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். நிலம் பற்றிய அரசியல் குறித்து இப்படம் ஆழகமாக பேசியுள்ளது, அதை சமகாலத்திலும் நம்மால் பொருத்திப்பார்க்க முடிகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் மிரட்டலான பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அவரின் திரைவாழ்வில் மைல்கல் படமாக இப்படம் அமைந்துள்ளது.
படத்தை பற்றிய அலசல் :
நம் முன்னோர்களின் வாழ்வியலை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்துள்ளனர். கமர்சியல் படங்களுக்கு உண்டான அம்சங்கள் இப்படத்தில் குறைவாக இருந்தாலும் தங்கலானின் புது உலகம் நிச்சயம் உங்களை பிரமிப்பூட்டும். லைவ் சவுண்ட் முயற்சி சில இடங்களில் ரசிக்கவும், வியக்கவும் வைக்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் தமிழை சில இடங்களில் புரிந்துகொள்ள முடியவில்லை. படத்தின் முதல் பாதி சற்று மெதுவாகவே சென்றாலும் காட்சிகள் செல்ல செல்ல சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் பாராட்டுகளை பெறுகிறது.
படத்தில் காட்டப்படும் சிறுத்தை, மயில் பாம்பு போன்ற காட்சிகளை VFXல் உருவாக்கியுள்ளனர் அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆடை வடிவமைப்பு கவனம் பெறுகிறது. படத்தின் ஒளிப்பதிவு தங்கலான் உலகத்தை யதார்த்தமாக காட்டுகிறது . எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையை சற்று குழப்புகிறது. தங்கத்தை தேடி அலையும் காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினையூட்டுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்துள்ளது.
படத்தில் பிளஸ் :
⦿ விக்ரமின் நடிப்பு
⦿ அனைத்து நடிகர்களின் யதார்த்த நடிப்பு
⦿ ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை
⦿ படத்தின் மேக்கிங்
⦿ சண்டை காட்சிகள்
⦿ வசனங்கள்
படத்தின் மைனஸ் :
⦿ எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை
⦿ VFX காட்சிகள்
⦿ சற்று குழப்பமான திரைக்கதை
சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும் இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த உண்மையான படைப்புகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். மொத்தத்தில் தங்கலான் தமிழ் சினிமாவின் ஓர் மணிமகுடம்
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“