“வெறும் வலிகளை சொல்லக்கூடிய படங்களைத் தாண்டி, இது தப்புதான் என்று உணருகிறார்கள். ஆனால், சமூகத்தை இணைக்கிற மாதிரியான காட்சி அமைப்புகள் கொண்டு ஒரு படம் கூட வரவில்லை” என்று இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இயக்குநர் சேரன் நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திடைப்படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஸ்ரீபிரியங்கா, லால், எஸ். ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார்.
‘தமிழ்க்குடிமகன்’ திடைப்படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் தங்கர் பச்சான், மாரி செல்வராஜ், சேரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பேசியதாவது: “சாதிப் பிரிவினை, சாதி அடக்குமுறை, சாதி விடுதலை இதையெல்லாம் பேசுகிறோம். ஆனால், செயல்படுத்துவதில் தடை; இது எல்லாம் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் யார் யார்? மக்களை மாத்திரம் சொல்ல முடியாது. மக்களும் காரணம். என்னுடைய கிராமம் பத்திரக்கோட்டையில் இருந்து என்னுடைய 14 வயதில் சென்னைக்கு வந்துவிட்டேன். அன்றைக்கு நான் பார்த்த சாதிய பாகுபாடு இன்றைக்கு இல்லை என்று என்னால் சொல்ல முடியும். இது தமிழகம் முழுக்க இருக்கு. ஆனால், இது எதை வைத்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு உயிர் கொடுக்க விரும்புபவர்கள் அதிகாரத்தைப் பெற விரும்புபவர்கள். அந்த அதிகாரத்தைக் கூட சாதியை வைத்துதான் பெறுகிறார்கள். சாதி இல்லைனு எழுதிட்டா மட்டும் போதாது. சாதி இல்லைனு பேசறவங்களை துன்புறுத்துகிறவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது. சாதியை வைத்துதான் இங்கே எல்லாமே இருக்குது, உருவாக்கப்படுகிறது. அது வெளியே போனால் தான் முற்றிலுமாகப் போகும். இல்லையென்றால், நமக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். கோவத்தைக் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
எல்லோருடைய கோபத்தைக் காட்டுவது முக்கியமா? இல்லை இணைப்பது முக்கியமா? அண்மையில் ஒரு முக்கியமான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்தேன். அவருடைய பெயர் கண்ணன். அவருடைய பணி என்னவென்றால், அவர் ஓய்வுபெற்ற பின், அவருடைய வீட்டில், வழக்கு தொடுக்கு விரும்பும் இரு தரப்பையும் வரவழைத்து பேசி மத்தியஸ்தம் செய்கிறார். அதற்காக அவர் எந்த பணமும் பெறுவதில்லை. இதைத்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது.
இது மாறிக்கொண்டே இருக்கிறது. மக்கள் முன்பு மாதிரி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்தாச்சு. அப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் அந்த செயலுக்காக கூனிக் குறுகுகிறார்கள். அந்த நிகழ்வை ஆதரிக்கும் அது ஒரு கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அதை ஒருநாளில் தீர்த்துவிட முடியாது. ஆனால், ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், இணைக்கிற வேலைதான். மேலும், பிரிவினையை உண்டு பண்ணுகிற வேலை இல்லை.
அதை எப்படி இணைப்பது? அதைதான் நாம் இப்போது செய்ய வேண்டும். அப்படிபட்ட படம்தான் வர வேண்டும். வெறும் வலிகளை சொல்லக்கூடிய படங்கள் தாண்டி, ஆமாம், இது தப்புதான் என்று உணருகிறார்கள். ஆனால், அதை இணைக்கிற மாதிரியான காட்சி அமைப்புகள் கொண்டு ஒரு படம் கூட வரவில்லை.
நான் கிராமத்தில் பிறந்தவன், நான் அங்கே இருக்கிறபோது சாதிய அடுக்குகள் என்ன என்பது பற்றி எனக்கு பெரியதாகத் தெரியவில்லை. எங்க ஊர்ல இரண்டு சாதிதான். சென்னை வந்த பிறகு, அது அப்படியே ஒன்னுமில்லாமல் போய்விட்டது.
நாங்குநேரியில் நடந்த சம்பவம் பற்றி எல்லாம் பார்க்கிறபோது என்ன சொல்வது, என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதுக்காகவாவது எழுத வேண்டும் என்று தோன்றும்போது, எழுதவே முடியவில்லை. நீங்கள் எப்படி அதை எழுத்தில் ட்விட்டரில் எழுதிவிட முடியுமா? யாரைப் பார்த்து எழுதுவது? யாரைப் பார்த்து கேட்பது? யார் அதற்கு பொறுப்பேற்க வேண்டுமோ அவர்களே அதற்கு பொறுப்பேற்கிறார்கள், பரிசு கொடுக்கிறார்கள் எல்லாமே செய்கிறார்கள். நீங்கள் என்ன பண்ணுவீங்க. இன்னும் எத்தனை பேர் சாவப்போறான், எல்லோருக்கும் போய் காசு கொடுத்துக்கொண்டிருக்கப் போகிறோமா? இந்த சாதிய பாகுபாடு, சாதிய பிரிவினை, சாதிய அடக்குமுறை, சாதிப் பெருமை இதெல்லாம் குறைகிற மாதிரி ஒரு திரைப்படம் வர வேண்டும். எல்லோருக்குள்ளும் வன்மத்தை வளர்த்துக்கொண்டே போகக் கூடாது. அப்படியா, உனக்கு வச்சிருக்கண்டா, உனக்கு இன்னொரு படத்தை எடுக்கக் கூடாது. இது சரியில்லை. அது வரக் கூடாது.
நாங்கு நேரியில் நடந்தது பெரிய அவமானாம். அது எனக்கு அதிர்வா இருக்குது. அதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நானும் பள்ளிக்கூடம் படம் எடுத்திருக்கிறேன். நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள். எனக்கு வருத்தமாக இருக்கிறது. கேமராவை முன்னால் வைத்துவிட்டு பேசுகிற ஒரு ஆளாக மாறிவிட்டோம். உண்மையில், இன்றைக்கு சிந்திக்க வேண்டியிருக்கிறது. அரசினுடைய அதிகாரத்தைப் பெற விரும்புகிறவர்கள், சாதியை வளர்ப்பது, அதற்கு தண்ணீரை ஊற்றி வளர்ப்பதே அவர்கள்தான். ஆனால், அவர்கள்தான் சாதியைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடிப்படையில் ஒரு வார்டு உறுப்பினரில் இருந்து, பஞ்சாயத்து தலைவரில் இருந்து, ஒரு கவுன்சிலரில் இருந்து சாதி இல்லாமல் ஏதாவது பண்ண முடியுதா? நாம் யாரைப் பார்த்து திட்டப் போகிறோம்.
நமக்கு கிடைத்ததெல்லாம் அம்பேத்கர், அவரைப் போல ஒருவர் பிறக்க முடியுமா? ஒரு உயர்வானவர். அதற்கு மேல எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவர் ஜீசஸ் கிறிஸ்துவுக்கு மேல். எல்லாவற்றையும் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார். வெட்கம் இல்லாமல் அவர் படத்தை வைத்து நாம் மாட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் படத்தை வைத்துக்கொண்டு அவருக்கு எதிரான செயலைச் செய்துகொண்டிருக்கிறோம். அவர் படத்தைப் போய் மாட்டிவிட்டால், எல்லாம் முடிந்துவிடுமா? அவரை வைத்து எல்லாம் தொழில்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். நாளையில் இருந்தாவது நாம் அம்பேத்கரை நினைத்துப் பார்க்க வேண்டும். காந்தியை நினைத்துப் பார்க்க வேண்டும்.
மனிதன் எப்படி என்றால் தம்பி சொன்ன மாதிரிதான், பிறக்கும்போது ஒரு குழந்தையாக இருக்கிறான். வளர்ந்த பின், எல்லாமே ஒரு சாதியாக மாறிப்போகிறது.
இந்த படம் ஒரு நல்ல படமாக வந்திருக்கிறது. சில காட்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. அவர்கள் யார் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரியாது. சேரன் சொன்னார். சேரன் திரைப்படத்தை தொழிலாகக் கொண்ட ஒரு ஆளுனு நீங்க நினைக்கலாம். தொழிலுக்காக நாங்க எல்லாம் திரைப்படத்தை செய்யவில்லை.
ஒரு 5 நாள் உழைத்தால் போது, ஒரு ஆண்டுக்கான பணம் கிடைத்துவிடும். ஆனால், ஏதோ ஒன்று இந்த மக்களுக்கு இந்த கதை மூலமாக செய்துவிட முடியுமா என்று போராடிக்கொண்டிருக்கிறோம். இது உண்மைதான்.
நான் கற்றுக்கொண்ட கலை மூலமாக என் மக்களிடம் பேச வேண்டியிருக்கிறது. அதை நாங்கள் அப்படி ஒரு கலையாகத்தான் நாம் பார்க்கிறோம். இதற்குள் இருந்து நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது.
ஒருவனை கேவலப்படுத்துவது, அவமானப்படுத்துவதுதான் இங்கே விற்கப்படுகிறது. என்ன பெரிய சமூக ஊடகங்கள்? ஏற்கெனவே மக்களுக்கு ஊடகங்கள் மீது நம்பிக்கை இல்லை. அது மக்கள் கைக்கு வந்து சமூக ஊடகங்கள் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால், அது மக்களுக்கு எதிராக இருக்கிறது. அப்படி இருக்கக் கூடாது. நல்ல படங்களை ஆதரியுங்கள். என்னுடைய படம் திரை முன்னோட்டம் வெளியாகிறது. அதற்காக நான் போகிறேன். எப்படி இருந்தாலும் இந்த படத்தை நான் திரையரங்கத்தில் பார்க்க விரும்புகிறேன்.
சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பது போலவே, ஒரு நடிகரின் முகத்தைப் பார்த்து சினிமா பார்க்கப் போவதும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.