மலிவு விலையில் சனிடரி நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடுத்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சாதனையை தழுவி எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படம் தான் ‘பேட்மான்’.
முருகானந்தத்தின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் அப்படியே பொருந்துகிறார். அவரின் கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி அக்ஷய் குமார் தன்னுடைய ஸ்டைலில் வெளிப்படுத்துவது அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளது. இருப்பினும் அவருடைய திரைப்பயணத்தில் 'பேட்மான்’ சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறுவது சந்தேகம் தான். காரணம், படத்தின் தொய்வான திரைக்கதை. இந்த படத்தில் அக்ஷய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். அக்ஷய் குமாரின் மனைவி ருவிங்கிள் கன்னா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு பழமைவாத குடும்ப பின்ணணியிலிருந்து வந்த மனிதர், பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிடரி நாப்கினை குறைந்த விலையில் எப்படி தயாரித்தார் என்பதை உண்மை சம்பவங்களை வைத்து ரசிகர்களுக்கு புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் பால்கி. பெண்களின் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசும் முதல் திரைப்படம் பேட்மான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இயக்குனர் சொல்ல வந்த ஆழமான கருத்து மக்களிடம் சென்று சேர்வதில் திரைக்கதையில் சில தடைகள் வருகின்றன என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது.
மத்திய பிரதேச பகுதியில் வாழும், அக்ஷய் குமார் தனது மனைவி, சகோதிரி, கிராம பெண்கள் ஆகியோர் மாதவிடாய் காலங்களில் படும் சிரமத்தை போக்க, பெண்கள் அனைவருக்கும் மலிவான விலையில் சனிடரி நாப்கினை வழங்க முடிவு செய்கிறார். அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். இறுதியில் அதில் வெற்றிக் கண்டாரா? அவரின் கண்டுப்பிடிப்பு என்னவானது என்ற கதையே, பாலிவுட் படத்திற்கு ஏற்றவாறு சில மசாலாக்கள் தூவி கூறியிருக்கிறார் இயக்குநர் பால்கி.
இன்றைய காலகட்டத்திலும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வீட்டிலிருந்து ஒதுக்கப்படுவது, மாதவிடாய் காலங்களில் மட்டும் அவர்களுக்கு தனியாக தட்டுகள், டம்ளர்கள் என தரப்படுவது என அனைத்தை செயல்களையும் இயக்குனர் கடுமையாக விமர்சித்துள்ளார். மாதவிடாய் என்பது பெண்ணாக பிறந்த அனைவருக்கும் நடக்கும் ஒரு இயல்பான நிகழ்வு. பெண்களை இதுப்போன்று தனியாக ஒதுக்கும் பழைய பாரம்பரியங்களை ஒட்டு மொத்தமாக மூட்டை கட்ட வேண்டும் என்ற கருத்து படம் முழுக்க பயணிக்கிறது.
முதம் பாதியில் சொல்லப்படும் இந்த கருத்து, இடைவேளைக்கு பின்பும் தொடருவதால் ரசிகர்களை பொறுமையை இழக்கின்றனர். படம் முழுக்க பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சொல்வதில் கவனம் செலுத்திய இயக்குநர் அதற்கான தீர்வுகளை சொல்வதில் கவனம் செலுத்த தவறியுள்ளார். தமிழர் ஒருவரின் பெருமையை பாலிவுட் சினிமா திரைப்படமாக வெளியிட்டு பெருமைப்படுத்திருப்பது அனைவரையும் அனாந்து பார்க்க வைத்துள்ளது. இதே பூரிப்பை இயக்குனர் திரைக் கதையிலும் காட்டி இருந்தால் பாட்மேன் திரைப்படம் உலகளவில் பேசப்பட்டு இருக்கும்.