scorecardresearch

பிரபல ரியாலிட்டி ஷோவில் பிரதமர் மோடியை கலாய்த்த சிறுவர்கள்: அண்ணாமலை கண்டித்து ட்வீட்!

பிரபல தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சிறுவர்களுக்கான ரியாலிட்டி ஷோவில், இரண்டு சிறுவர்கள் மன்னர், அமைச்சர் வேடமிட்டு பிரதமர் மோடியை கலாய்ப்பது போல் இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PM Modi
The boys who criticized PM Modi on the popular Tamil reality show

நவம்பர் 8, 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உடனடியாகச் செல்லாது என அறிவித்தார்.

இதன் காரணமாக கறுப்புப் பணம் கணிசமாகக் குறையும். நாட்டில் உள்ள கள்ள நோட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படும். இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும். மேலும் நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணமாகக் கூறிய நான்கு நோக்கங்களும் இன்று வரை முழுமையாக நிறைவேறவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

இந்நிலையில் பிரபல தமிழ் டிவி சேனலில், குழந்தைகள் மட்டும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்றில், மோடி அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கலாய்த்து, சிறுவர்கள் நாடகம் ஒன்று செய்துள்ளனர்.

அதில் ஒரு சிறுவன், வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசுகிறான்.

நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? இந்த கருப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாது என சொல்லப்போகிறேன். அப்படி செய்ஞ்சா கருப்பு பணம் ஒழிஞ்சிடும்ல என்று பேசுகிறான்.

அதற்கு அமைச்சர் வேஷமிட்ட மற்றொரு சிறுவன்: இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு என்று கூறுகிறான்.

மேலும் அமைச்சர் வேடமிட்ட சிறுவன்: லாபத்தில் உள்ளதையும் ஏன் விற்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு மன்னன்; என்ன அமைச்சு! நீங்களும் மக்களே போலவே கேள்வி கேட்கறீர்கள்! நஷ்டத்தில் உள்ளதை வித்தால் நாம் எப்படி லாபம் பார்க்க முடியும். லாபத்தில் உள்ளதை விற்றால் தானே நாம் லாபம் பார்க்க முடியும் என்று கூறுகிறான்.

சிறுவர்களின் இந்த நாடகம் சோஷியல் மீடியாவில் ஒரு பக்கம் வைரலாக பரவி வந்தாலும், மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

குறிப்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், ”ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணை அமைச்சர் திரு முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த லஷ்மி ராமச்சந்திரன் என்ற பத்திரிக்கையாளர்; இதோ டாக்டர்… சுதந்திர பத்திரிகைக்கு 3வது மிரட்டல்! திரு. முருகன் அலுவலகங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களை (தவறான) கட்டுப்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்தார் என்று கூறியிருக்கிறார்.

இதேபோல, இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் ”குழந்தைகளை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது மிகவும் மோசமானது. உங்கள் தலைவர்களில் ஒருவரைப் பற்றிய முகப்புத்தக இடுகைக்காக புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சிவகங்கை தொகுதிக்கான எம்.பி. கார்த்தி சிதம்பரம்” நடவடிக்கை யார் மீது? எடுத்தவர் மீதா?, நடித்தவர் மீதா? அல்லது அதை பார்த்து சிரித்தவர் மீதா? @BJP4India = Nazi என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இதோ அந்த சிறுவர்களின் காமெடி வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: The boys who criticized pm modi on the popular tamil reality show