Leo lawyers car accident in Chennai : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ.இத்திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு முதல் 4 நாள்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்திருந்தாலும் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் 4 மணி காட்சிகளை திரையிட வேண்டும் என்று விரும்புவதால், 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி இல்லை என அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து, தமிழக அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கவும், இந்த மனு மீதாக முடிவை நாளை (அக்.18) மதியத்திற்குள் அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “லியோ படத்திற்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தினமும் 6 காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்படும்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் லியோ படத்திற்கு காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும். திரைத்துறையில் அரசின் தலையீடு இல்லை.
திமுக அரசு திரைத்துறை ஊக்கப்படுத்தி முன்னேற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது” என்றார்.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் லியோ படத்தின் வழக்குரைஞர்கள் குழு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்தது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இக்குழு காரில் திரும்ப இருந்தது. இந்த நிலையில் காரை ஓட்டுநர் எடுத்துவந்த பெண் ஒருவரின் பைக் மீது கார் மோதியது.
இதனால் சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதற்கான மருத்துவச் செலவை வழக்குரைஞர்கள் குழு ஏற்பதாக தெரிவித்துள்ளது.
லியோ படத்துக்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் சென்சார் செய்யப்படாத முன்னோட்ட காட்சி வெளியீடு அதில் விஜய் பேசிய ஆட்சேபத்துக்குரிய வார்த்தை சர்ச்சையானது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“