பாபு
மார்ச் ஒன்று தொடங்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி முன்னிலையில் தலைமைச்செயலகத்தில் திரைத்துறையினருடன் நடத்திய ஒன்பது மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்தார்.
பேச்சுவார்த்தையின் முடிவுகள் என்னென்ன என்பதையும், எப்போது படப்பிடிப்புகள் தொடங்கப்படும், புதுப்படங்கள் எந்தெந்த வரிசையில் வெளியிடப்படும் என்பதையும் இன்று முடிவு செய்து முறைப்படி அறிவிப்போம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைகளையும், அதில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றியையும் பார்க்கலாம்.
மார்ச் ஒன்று முதல் புதிய தமிழ்ப் படங்களை திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் இறங்கியபோது, டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று க்யூப், விஎஃப்ஓ நிறுவனங்களுக்கு எதிரானதாகவே அது இருந்தது. திரையரங்குகள் இந்த நிறுவனங்களுடன் போட்டுக் கொண்ட தவறான ஒப்பந்தங்களால் தயாரிப்பாளர்கள் அதிக பணம் செலுத்தி வந்தனர். அதனால், இந்த நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் இயல்பாகவே திரையரங்குகளுக்கு எதிரானதாகவும் அமைந்தது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களால் பயனடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பெருந்தலைகள், தங்கள் விசுவாசத்தை காட்ட, தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் மார்ச் 16 முதல் நாங்களும் வேலைநிறுத்தம் செய்கிறோம் என அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் படப்பிடிப்பு உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் தடை விதித்தது. திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்த போராட்டம் தொடங்கும் முன்பே பிசுபிசுத்தது. இது வெறும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்தம் அல்ல, திரைத்துறையை சீர்த்திருத்துவதற்கான போராட்டம் என்றது தயாரிப்பாளர்கள் சங்கம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் முன் வைத்த முக்கிய கோரிக்கைகள்.
1. விபிஎஃப் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
2. ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.
3. திரையரங்கு டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மைக்கு மாற வேண்டும்.
4. முன்பு இருந்தது போல் பர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ், தேர்ட் கிளாஸ் என மூன்றுவகை கட்டணங்களை அமல்படுத்த வேண்டும்.
5. அரசு நிர்யணித்த பார்க்கிங் கட்டணமே வசூலிக்க வேண்டும்.
6. திரையரங்கு கேன்டீன்களில் தின்பண்டங்களை பலமடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது.
இன்னும் பல கோரிக்கைள் இருப்பினும் இவையே பிரதானமானவை. இதில் கிடைத்தவை எவை என்று பார்க்கலாம்.
1. க்யூபின் விபிஎஃப் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இ-சினிமாவுக்கு இதுவரை தயாரிப்பாளர்கள் 9000 ரூபாய் செலுத்தி வந்தனர். இனி 5000 அவர்கள் செலுத்தினால் போதும்.
ஒரு படத்தின் ஒட்டு மொத்த திரையிடலுக்கு இதுவரை 22000 ரூபாய் வசூலித்து வந்தனர். அது 10000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்ததை சாதித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். படங்களின் மாஸ்டரிங்கையும் இனி தயாரிப்பாளர்கள் சங்கமே செய்யும்.
2. ஆன்லைன் முன்பதிவு செய்வதற்கான இணையதளத்தை தயாரிப்பாளர்கள் சங்கமே விரைவில் தொடங்க உள்ளது. இப்போது ஒரு டிக்கெட்டுக்கு 30 முதல் 35 ரூபாய் வரை சேவை கட்டணமாக பிடித்துக் கொள்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கவிருக்கும் இணையதளத்தில் அதிகபட்சம் நான்கு ரூபாயே வசூலிக்கப்படும்.
இது மிக முக்கியமான ஒரு சாதனை. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் அந்த இணையதளத்தை எப்போது தொடங்கும், எப்போது செயல்பாட்டுக்கு வரும், திரையரங்குகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பது நிறைய நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது. அந்தவகையில் இது நடைமுறைக்கு வந்தால் மட்டுமே வெற்றியாக பார்க்கப்படும்.
3. டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு ஆணையை வெளியிட அரசு சம்மதித்துள்ளது. ஜுன் 1 ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டால் திரையுலகின் 80 சதவீத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். முக்கியமாக நடிகர்கள் சம்பளம் கட்டுக்குள் வரும்.
அதேநேரம், பார்க்கிங் கட்டணம் குறித்தும் இதேபோல் அரசு ஆணை வெளியிடப்பட்டது. அதனை 90 சதவீத திரையரங்குகள் கடைபிடிக்கவில்லை. ஆக, கணினிமயமாக்கம் என்பதும் நடைமுறைக்கு வந்து, அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டால் மட்டுமே வெற்றி என்று எடுத்துக் கொள்ள முடியும்.
4. முன்பு இருந்தது போல் மூன்று வகை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளிக்கவில்லை.
5. நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 10 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு ஆணை ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அதனை திரையரங்குகள் இன்னும் செயல்படுத்தவில்லை. இது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் சொன்னால் மட்டுமே தெரியும்.
6. கேன்டீன் கட்டண கொள்ளை குறித்தும் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் எதுவும் கூறவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதி கிணறு தாண்டியிருக்கிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் விவகாரத்தில் அவர்களுக்கு முழுவெற்றி கிடைத்துள்ளது. பொதுமக்களுக்கு நன்மைபயக்கும் விஷயத்தில் - அதாவது டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கம் - நடைமுறைக்கு வந்தால் மட்டுமே வெற்றி என்று சொல்ல முடியும். மேலும், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிப்பது என்று முடிவு செய்துள்ளனர். இந்த பிளக்ஸிபிள் ஏற்பாடு, தில்லுமுல்லுகள் நடப்பதற்கு சௌகரியமாக அமையும் என்பது ஒரு முக்கிய குறைபாடு.
கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படுவது அரசின் கறாரான செயல்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கிறது.