சர்ச்சை மற்றும் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் பாலிவுட்டில் தயாரான படம் தி கேரளா ஸ்டோரி. அதா சர்மா, யோகிதா பிகனி, சோனியா பாலனி, சித்தி இதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுது.
கேரளாவில் இந்து பெண்கள் முஸ்லீம் நபர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு வருவதாக இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல மாநிலங்களில் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த மே 5-ந் தேதி தி கேரளா ஸ்டோரி படம் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருவதாகவும், பாலிவுட் சினிமாவில் 2023-ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வரை (மே 9) தி கேரளா ஸ்டோரி படம் ஒரு வாரத்திற்குள் ரூ 50 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் வெளியிட்டுள்ள தகவலின்படி தி கேரளா ஸ்டோரி மே 9-ந் தேதி (நேற்று) ரூ 11 கோடி வசூலித்ததன் மூலம் தற்போதுவரை படத்தின் மொத்த வசூலை ரூ 56.72 கோடியாக உள்ளது.
மேலும் நாட்டின் இந்தி பேசும் மாநிலங்களில் படத்தின் மொத்த வசூல் 29.67% மாக உள்ளது. தி கேரளா ஸ்டோரி படம் வெளியான நான்காவது நாளை விட 5-வது நாளில் வசூல் சற்று அதிகமாக உள்ளது. சனிக்கிழமை (மே 6) ரூ 11.22 கோடி, ஞாயிற்றுக்கிழமை (மே 7) ரூ 16.40 கோடி மற்றும் திங்கட்கிழமை (மே 8)ரூ 10.07 கோடி வசூல் செய்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படம் போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தி காஷ்மீரி ஃபைல்ஸ் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்த படம் 5 நாட்களில் ரூ 18 கோடி வசூலித்தது. அதேபோல் உண்மைகளை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு கூறப்படுகிறது
இதனிடையே மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. தி கேரளா ஸ்டோரி வெளியான 5 நாட்களில் ரூ 50 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் அஜய் தேவ்கனின் போலா படத்தின் வசூலை முறியடித்துள்ளது. அதேபோல் அக்ஷய் குமாரின் செல்ஃபி (ரூ. 16.85 கோடி) மற்றும் கார்த்திக் ஆரியனின் ஷெஹ்சாதா (ரூ. 32.20 கோடி) ஆகிய படங்களில் மொத்த வசூல் சாதனையை தி கேரளா ஸ்டோரி படம் 5 நாட்களில் முறியடித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படம் வசூலில் சாதனை படைத்து வந்தாலும், படத்திற்கான எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில், நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எதையுமே கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்துங்கள்’ “32000, பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்கள். அதன்பிறகு அந்த எண்ணிக்கையை 3-ஆக மாற்றினார்கள். ஆனால் முதலில் ஏன் 32000 என்று குறிப்பிட்டார்கள்? 32000 என்பது போலியான எண்ணிக்கை என்பது அனைவருக்கும் தெரியும. இந்த எண்ணிக்கை தற்போது அது 3-ஆக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு என்ன பொருள்? இது குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை ஆனால் மக்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் எதையுமே கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“