இந்தியில் தயாராகியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உளவுத்துறை அமைப்பு எச்சரிச்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டுடிப்டோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகியுள்ள படம் தி கேரளா ஸ்டோரி. அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கேரளா மாநிலம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தில் டிரெய்லரில், கேரளாவில் பல பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டதாகவும் காட்சிகள் உள்ளது. மேலும் இது உண்மைக்கதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் கேரளாவில் நடக்கவில்லை என்றும், இந்த படம் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் வெறுப்பு மற்றும் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் திட்டமிட்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்று தகது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதனிடையே இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 10 சர்ச்சை காட்சிகளை நீக்கி படத்திற்கு ஏ சன்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் நாளை மறுநாள் (மே 5) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் படம் வெளியாகுமா அல்லது தடை செய்யப்படுமா என்பது குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தமிழக அரசு படத்திற்கு தடை விதிக்குமா என்று குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“