lokesh-kanagaraj | madurai-high-court | நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் லியோ படம் வெளியாகி இருந்தது.
நடிகர் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த படம் லியோ.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் வசூலில் கிட்டத்தட்ட ரூ.400 கோடியை நெருங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் படத்தில் ஆபாச மற்றும் வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளன; படத்தின் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன” எனக் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
லியோ படம் மீது தொடக்கத்தில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
முதலில் லியோ படம் வசூலில் ஜெயிலர் படத்தை முந்திவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாக அதுபின்னர் சம்பந்தப்பட்ட நபர்களால் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது லியோ படத்துக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“