scorecardresearch

இந்த டிஜிட்டல் கச்சேரிகள் தொடர்ந்து நடைபெறும் – புது அவதாரம் குறித்து சஞ்சய் சுப்ரமணியன்

புதிய மற்றும் அரியவற்றைத் தவிர, பேகடா, கல்யாணி, நாதபைரவி, மாரரஞ்சனி, கீரவாணி, ஜோதிஸ்வரூபிணி, மத்தியமாவதி மற்றும் பல வழக்கமான ராகங்களின் தலைசிறந்த பாடல்களும் இடம் பெற்றன.

Sanjay subrahmanyan, Sanjay Sabha

G Pramod Kumar

Sanjay Sabha : சஞ்சய் சுப்ரமணியனின் இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். என் வாழ்வில் நான் கேட்ட மிகவும் வெளிப்படையான, நேர்மையான கலை வெளிப்பாடு அது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கார்னாடிக் இசையில் சிறப்பான பங்களிப்புகளை செய்து வரும் அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. ஆனாலும் அவரைப் பற்றி எனக்கு 2000-களின் முற்பாதியில் தான் தெரியும். உண்மையில் நேருக்கு நேர் அவருடைய கலையில் மூழ்கியது 2010களின் துவக்கத்தில் தான்.

காலமற்ற டிஜிட்டல் உலக தன்மைக்கும், பகிர்ந்து கொள்ளப்பட்ட நினைவுகளுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும். சமகாலத்தவரின் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளவும், அவருடைய இசையை வரையறுக்கும் சிக்கலான கலைநயத்தை அறியவும் அவருடைய இசைப் பயணத்தின் பாதையை நான் ஓரளவு உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அவருடைய இசை உலகிற்கு தாமதமாகவே வந்தடைந்த எனக்கு, இசை உலகின் உச்சத்தில் இருக்கும், இசை ஞானத்தின் சக்திவாய்ந்த பிம்பமாக, பல ஆண்டுகளாக பயிற்சியின் மூலம் பெறப்பட்ட உள்ளார்ந்த திறமையுடன் பாடிய அவர் பாடல்களை நேரடியாக காண்பது அதிர்ஷ்டமாகவே இருந்தது.

அதே காரணங்களுக்காக, பலரைப் போன்று நானும், அவர் இசைப் பயணம் மேற்கொண்ட இடங்களுக்கெல்லாம் பயணித்தேன். அங்கு நான் கண்டதெல்லாம் தனித்துவமான காட்சிகள். அவர் தன்னுடைய வாழ்வின் ஓர் அங்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மேடையில், அவர் தன்னலமற்ற, உணர்ச்சிகளால் மோட்சம் அடைந்த, தடையற்ற, அமைதியான அதே நேரத்தில் பரப்பான ஒருவராக இருப்பார். நீங்கள் அவரது பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், 40 ஆண்டுகளாக அவர் பாடிய பாடல்களின் தனித்துவமான தேர்வுகளையும் அதே நேரத்தில் புதுமையையும் காண்பீர்கள்.

நான் அவருடைய நேரடியான இசைக் கச்சேரிகளை ”கிளாசிக்கல் இசையின் ஐமேக்ஸ்” என்று தான் அழைப்பேன். அவரின் இருபுறமும் நெய்வேலி வெங்கடேஷின் மிருதங்கமும், எஸ். வரதராஜனின் வயலினும் இருக்க அவை மிகப் பெரிய ப்ளாக்பஸ்டர்கள் தான். அதே நேரத்தில் இரண்டு இசைக் கச்சேரிகள் ஒரு போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்ற ரசிகர்களைப் போன்றே நான் அவர்களுடன் சேர்ந்து, நடனமாடி, அழுது, பிரார்த்தனை செய்து, மகிழ்ந்திருக்கின்றேன். நான் அதிகமாக கொண்டாடிய இசைக்கலைஞனாக என்னுடைய வாழ்வில் அவர் இருக்கிறார். சஞ்சயின் இசைக் கச்சேரிகளை இனி நேரில் சென்று அதிகம் காண வேண்டும் என்று திட்டமிட்டிருந்த போது தான் கொரோனா அனைத்தையும் நிறுத்தியது.

சென்னையில் மார்கழி உற்சவம் (நவம்பர் 2019 – ஜனவரி 2020), திருவனந்தபுரத்தில் குதிரமாலிகா கச்சேரி (ஜனவரி 2020) ஆகிய கச்சேரிகளை தொடர்ந்து கடைசியாக சஞ்சியின் கச்சேரியை நேரடியாக நான் கொச்சியில் உள்ள ஃபைன் ஆர்ஸ் சொசைட்டியில் மார்ச் 2020-ன் போது பார்த்தேன். கொச்சியில் நடைபெற்ற கச்சேரிக்கு பிறகு, சென்னையில் ஏப்ரல் – மே மாதத்தில் நடைபெறும் கபாலீஸ்வரர் கோவில் கச்சேரியில் அவரின் இசையை கேட்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். பிறகு சென்னையில் மார்கழி உற்சவம் துவங்குவதற்கு முன்பு காரமானா, மதுரை, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் வருடம் தவறாமல் அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தேன். இதற்கிடையில் அவருடைய வெளிநாட்டு ரசிகர்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நான் இங்கே குறிப்பிடவில்லை.

ஆனால் இவை ஏதும் நடைபெறவில்லை. பார்வையாளர்களுக்கு முன் அவர் பாடல்கள் பாடி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றது. மூன்றாம் அலையின் அச்சுறுத்தலும் இருப்பதால் அவர் மீண்டும் எப்போது இசைக் கச்சேரியில் பாடுவார் என்பதும் யாருக்கும் தெரியாது.

ஆனால் தன்னுடைய உண்மையான ரசிகர்களுடன் இணையாமல், பாடல்களை பாடாமல் சஞ்சயால் விலகி இருக்க முடியுமா? அல்லது அவருடைய பாடல்களை கேட்காமல் அவருடைய ரசிகர்கள் தான் வாழ முடியுமா? இந்த நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வரும் வரை எவ்வளவு நாட்கள் தான் அவரும் அவருடைய ரசிகர்களும் காத்திருக்க முடியும்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாய் அமைந்தது தான் சஞ்சய் சபா. சந்தா அடிப்படையிலான டிஜிட்டல் கச்சேரி அரங்கம் ஒன்றை அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தனது யூடியூப் சேனலில் தொடங்கினார். டிஜிட்டல் பெர்லின் பில்ஹார்மோனிக் மற்றும் LA பில் போன்றது அவருடைய சஞ்சய் சபா. மோசமான நாட்களிலும் கூட க்ளாசிக்கல் இசை எவ்வாறு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு சஞ்சய் சபா ஓர் உதாரணம்.

Sanjay Subrahmanyan's concerts

பாடல்கள் பாடாமல் நான் வீட்டில் விரக்தியுடன் அமர்ந்திருந்தேன். எப்போது வேண்டுமானாலும் நிலைமை சீராகலாம் என்ற நம்பிக்கை எனக்கு கடந்த இருந்தது. ஆனால் செப்டம்பர், அக்டோபர் காலங்களில் இது நம்மை விட்டு அவ்வளவு விரைவில் போகாது என்று உணர துவங்கினேன். இந்த ஐடியா குறித்து நான் அப்போது தான் யோசித்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு கச்சேரி, பிறகு சில பாடல்கள் என்பது தான் திட்டமாக இருந்தது. ஆனால் எட்ஜ் டிசைன் ஹவுஸின் பார்கவி மணி தான் என்னுடைய டிஜிட்டல் இருப்பை நீடித்தார் என்று என்று சஞ்சய் சபாவின் தோற்றம் பற்றி சஞ்சய் கூறினார்.

சஞ்சய் சபா ஒரு வழக்கமான சஞ்சய் ரசிகர் அல்லது ஒரு பாரம்பரிய இசை காதலன் தேடிக்கொண்டிருக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு கச்சேரி என ஒரு ஆண்டில் 12 கச்சேரிகள். இது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கலந்து கொள்வதைக் காட்டிலும் அதிகமானது (மார்கழி மாத கச்சேரிகளைத் தவிர).

அனைத்துக் கோணங்களிலும் சுழலும் உயர் தரம் கொண்ட கேமராக்களால் நீங்கள் எதையும் “மிஸ்” செய்யவில்லை என்பதை உறுதி செய்வதோடு, அனைவருக்கும் முன்னிருக்கையில் இடம் இருப்பதால் ஒருவர் இருக்கைக்காக சிரமப்பட தேவையும் இல்லாமல் போனது சஞ்சய் சபாவில்.

நான் ஆரம்பம் முதலே சஞ்சய் சபாவின் கச்சேரிகளை ரசிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு கச்சேரியும் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டது. ரசிகருக்கு, சஞ்சயின் ராகங்களையும், இசை அமைப்பையும் ரசிக்க, அனுபவிக்க வாய்ப்பினை வழங்குகிறது. இந்த இசையமைப்பை இதற்கு முன்பு ஒருவர் பதிவாகவோ கூட கேட்டிருக்க மாட்டார். அதனோடு சஞ்சயின் தொடுதலோடு வழக்கமான கர்னாடக சங்கீதத்தின் முத்தான பாடல்களை அவர் பாடுகிறார். உதாரணமாக கூறினால், நான் வச்சஸ்பதியை, அதுவும் ஸ்வாதி திருநாள் கீர்த்தியுடன் கேட்டதில்லை. நவரச கனடாவையும் கேட்டதில்லை. நான் சந்திரகவுன்ஸில் ஒரு பாடலை மட்டுமே கேட்டிருக்கிறேன். தமிழ் பல்லவியுடன் கூடிய ராகம் தானம் பல்லவியை நான் கேட்டதில்லை. அதே போன்ற ராகம் தானம் பல்லவியுடன் கலாவதி, ரேவதி மற்றும் தன்யாசியை நான் கேட்டதில்லை. உண்மையில் அங்கே நிறைய இருந்தன. புதிய மற்றும் அரியவற்றைத் தவிர, பேகடா, கல்யாணி, நாதபைரவி, மாரரஞ்சனி, கீரவாணி, ஜோதிஸ்வரூபிணி, மத்தியமாவதி மற்றும் பல வழக்கமான ராகங்களின் தலைசிறந்த பாடல்களும் இடம் பெற்றன.

Sanjay Subrahmanyan's concerts

சஞ்சயின் ஒவ்வொரு கச்சேரியும் உள்ளார்ந்த, ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய நுண்ணறிவு மற்றும் அனுபவ வேறுபாட்டிற்காக அறியப்படுகிறது. பாடல்களை, ராகத்தை அவர் மீண்டும் பயன்படுத்துவதில்லை. ராகங்கள், மொழிகள், இசை அமைப்பாளர்கள், மற்றும் பாடல்களின் பாணியிலும் பல்வேறு தேர்வுகள் இருப்பதை அவர் உறுதி செய்கிறார். சஞ்சய் இசை நிகழ்ச்சிகளின் இந்த தவிர்க்க முடியாத கூறுகள் சஞ்சய் சபாவிலும் பிரதிபலிக்கின்றன. உயர் தரமான டிஜிட்டல் வடிவம் அது மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.

இரண்டு விதமான மெம்பர்ஷிப்களை சஞ்சய் சபா வழங்குகிறது. ஒன்று பேட்ரோன் மற்றொன்று ஆதரவாளர்கள் தளம். பேட்ரோன்களுக்கு (Patrons) ஒவ்வொரு மாதமும் 90க்கும் அதிகமான நிமிடங்களில் கச்சேரிகள், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக வீடியோக்கள், வழக்கமாக சஞ்சய் அவருடைய யூடியூப் தளத்தில் வெளியிடும் பாடல்களை விரைவாக அணுகும் வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. ஆதரவாளர்களுக்கு இலவச வீடியோக்களுக்கு விரைவான அணுகல்கள் வழங்கப்படுகிறது. கூடுதலாக, On that Note மற்றும் Short Notes என்ற இரண்டு சிறப்பம்சங்களும் ரசிகர்களுக்காக வழங்குகிறார் சஞ்சய்.

வடிவம் மற்றும் வகையைப் பொருட்படுத்தாமல், கிளாசிக்கல் இசையை சிறப்பாக்கும் ஒரு உலகளாவிய அம்சமாக இருப்பது, மாணவராகவும், கலைஞராகவும் பல வருடங்கள் ஒரு கலைஞர் பெறும் அனுபவத்தின் ஆழம். உண்மையில் இவை ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்மாக நகர்த்துகிறது. அவர்களின் வாழ்க்கை அவர்களின் கலையிலிருந்து பிரிக்க முடியாதது. மேலும் அவர்களின் பாடல்கள், தனிப்பட்ட கதைகளின் இசை அமைப்புகள், அளவுகள், நிகழ்ச்சிகள், இடங்கள், மக்கள் மற்றும் சொந்த படைப்புகளின் பயணங்களால் நிரம்பியுள்ளது.

ஹெர்பர்ட் வான் கராஜனை எப்படி பாதி திறந்திருக்கும் வியன்னாவில் ஒரு அறையின் கதவின் வழியே இளைஞனாக எப்படி பார்த்தார் என்பதையும் அந்த நேரத்தில் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய விளிம்பிற்கு 13 வயதில் இருந்தே கராஜன் எப்படி ஆனே சோஃபி முட்டரை எப்படி தள்ளினார் என்பதை விவரித்தும் ஜூபின் மேத்தா ழுதிய விதம் ஞாபகம் வருகிறது.

அவரது அழகான பாணியில், சஞ்சய் தாராளமாக இதுபோன்ற அற்புதமான பல தனிப்பட்ட கதைகளை On that Note – குறிப்பில் கூறினார். இது அவருடைய இசையை, அவர் வளர ஆரம்பித்த காலம் தொட்டு இன்று முதல், பாராட்டுவதை மேலும் அர்த்தமாக்குகிறது. ராகங்கள், இசையமைப்புகள், மொழிகள், மக்கள், குருக்கள், சந்தர்ப்பங்கள் என அனைத்தும்; அவை வெறும் கதைகள் மட்டுமல்ல. அவை ஒரு நேரத்தில் சுமார் இரண்டு நிமிடங்களில் கர்னாடக இசையின் அவரது கண்கவர் உலகில், மாயம் நிறைந்த ஆழமான “டைவ்”-க்கு சமம். இதுவரை அனைத்து அத்தியாயங்களும் ஆக்ரோஷமாக இருந்தபோதிலும், நாதஸ்வர கலைஞர் ஒருவர் ச-ப-ச கட்டமைப்பை பயன்படுத்தி ஒரு ராகத்தை எப்படி பாட வேண்டும் என்று கூறிய கதை பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

Sanjay Subrahmanyan's concerts

ஸ்வரங்களை மேம்படுத்துவதில் சஞ்சய் தனித்துவமானவர். ஷார்ட் நோட்ஸ் பகுதியில், ஒருவர் ஒரு ராகத்தின் ஸ்வர-சுருக்கத்தை ஒரு கவர்ச்சிகரமான மற்றும் ஸ்னாப்பி வழியில் அனுபவிக்க முடியும். சில குறிப்புகளில் உச்சரிப்பு, பண்பேற்றம், இயக்கவியல், சஸ்பென்ஸ் மற்றும் பல – 30 வினாடிகளுக்குள் வியக்கத்தக்க மாயங்களை நிகழ்த்திவிடுகிறார். உங்களிடம் விட்டுச் செல்லும் அந்த மாயம் தான் அதனை மேலும் சிறப்பாக்குகிறது. அதில் ஒரு இளையராஜா மறைந்திருக்கலாம். அல்லது ஒரு தனித்துவமான இசைக்கோர்வை மற்றும் தனித்துவமான சொற்றொடர் பற்றிய குறிப்பு இருக்கலாம். சமூக வலைதளங்களில் வரும் பரப்பரப்பான பதிலைப் பார்த்தால், Short Notes தெளிவாக ஒரு கிராஸ்ஓவர் வெற்றி தான்.

சஞ்சய் தீவிரமாக டிஜிட்டல் செல்ல வைத்தது கோவிட்டின் அவசியம் என்றாலும், அதன் தாக்கம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. மக்களிடம் இருந்து வரும் ரெஸ்பான்ஸ் அற்புதமானது. நாங்கள் இதனை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். எல்லாம் சரியான பிறகும் கூட மாதம் மாதம் இது போன்ற கச்சேரிகள் தொடர்ந்து நடைபெறும். பார்கவி மணி மற்றும் அவருடைய குழு, ஆடியோ மற்றும் சவுண்ட் ஆகியவற்றை பார்த்துக் கொண்ட எம்.டி. ஆதித்யா ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும் தான் இதன் க்ரெடிட் போய் சேர வேண்டும் என்றும் சஞ்சய் கூறினார்.

சஞ்சயின் பழைய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் சஞ்சய் சபாவில் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது ஏதும் உறுதியாக இல்லை என்ற பதிலும் அவரிடம் இருந்து வந்தது. Spotify போன்ற தளங்களில் இருப்பை வலுப்படுத்துவது குறித்து ஏதேனும் சாத்தியங்கள் உள்ளாதா என்ற கேள்வி எழுப்பிய போது, ஆம். ஆடியோ தளங்கள் சிறந்த ட்ராஃபிக்கை வழங்குகின்றன. ஏனெனில் டிஜிட்டல் பார்வையாளர்களை மனதில் கொண்டு பழைய இசை நிகழ்ச்சிகள் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. அவை பெரும்பாலும் ஆர்கைவல் (சேமிப்பு) நோக்கங்களுக்காக இருந்தன” என்றார்.

இயல்பு நிலை திரும்பிய பிறகும் அவர் சஞ்சய் சபாவைத் தொடருவார் என்பது மிகவும் நம்பிக்கைக்குரியது. அதற்குள், அவரின் சில நேரடி இசை நிகழ்ச்சிகளின் பதிவுகளையும் அவர் அவ்வப்போது சேர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2000 களில், சஞ்சய் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக இருந்தார். எனவே அவரது புதிய டிஜிட்டல் அவதாரம் குறித்த புதிய யோசனைகள் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் ஆச்சரியமில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: The show must go on sanjay subrahmanyans on note in digital avatar