/indian-express-tamil/media/media_files/2025/09/19/robo-shankar-2025-09-19-17-34-23.jpg)
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் தனது நகைச்சுவை நடிப்பால் பலகோடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் ரோபோ சங்கர். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செப்டம்பர் 18 அன்று ரோபோ ஷங்கர் காலமான செய்தி, கலை உலகில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இவரது இறுதி அஞ்சலிக்கு திரையுலகினர் பலர் வந்திருந்தனர். கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோரும் வருகை தந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நடிப்புத் திறமையால், எண்ணற்றோரின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ரோபோ சங்கர்.
ரோபோ சங்கரின் இந்த மறைவுக்குப் பின்னால், ஒரு அன்பான குடும்பத்தின் இழப்பு இருக்கிறது. அவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். மகள் இந்திரஜா, 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். குறிப்பாக, "குண்டம்மா, குண்டம்மா" என விஜய் பேசும் காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாகும்.
கல்வியில் கவனம் செலுத்தி வந்தாலும், இந்திரஜா தொடர்ந்து நடிப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக இருக்கிறார். கடந்த வருடம் இயக்குனர் கார்த்திக்கை திருமணம் செய்த அவர், இந்த ஜனவரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு மூத்த நடிகர் கமல்ஹாசன் 'நாச்சத்திரன்' எனப் பெயரிட்டுள்ளார். இவர்கள் தம்பதியாக விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஷோவிலும் கலந்து கொண்டனர்.
ரோபோ சங்கரின் குடும்பம் என்பது அவரது நெருங்கிய உறவுகளுக்குள் மட்டும் அடங்கவில்லை. அவரது சகோதரரின் மகளும் கடந்த எட்டு ஆண்டுகளாக ரோபோ சங்கரின் வீட்டில் வசித்து வருகிறார். இவரும் பார்க்க கொஞ்சம் இந்திரஜாவின் சாயலிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த தந்தையிடம் இருந்து விலகி இருந்த நேரத்திலும், தனது சித்தப்பாவின் அன்பும் அரவணைப்பும் தனக்குக் கிடைத்ததாக அவர் சமூக ஊடகத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும் நேற்று ரோபோ சங்கர் இறந்த நிலையில் "உன்னை நேசிக்கிறேன், சித்தப்பா" என்ற அவரது உருக்கமான பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.