திரையரங்குகளின் கட்டண கொள்ளை - தமிழக அரசு என்ன செய்கிறது?

பாபு

திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. ஜுன் ஒன்றுமுதல் அனைத்து திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையும் கணினிமயமாக்கப்படும் என்று உறுதியளித்த தமிழக அரசு அதனை இன்னும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் மீண்டும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை சட்டவிரோதமாக உயர்த்திவிடுகின்றன. காலா படத்தின் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பதாகவும், பார்க்கிங் கட்டணத்தையும் திரையரங்குகள் உயர்த்தியிருப்பதாகவும் தேவராஜன் என்பவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். பார்க்கிங் கட்டணம் இருசக்கரவாகனங்களுக்கு அதிகபட்சம் பத்து ரூபாய், நான்கு சக்கர வாகனங்கiளுக்கு அதிகபட்சம் இருபது ரூபாய் என தமிழக அரசு அரசாணையே வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த திரையரங்கும் இதனை மதிப்பதாக இல்லை.

தேவராஜனின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிக டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்க தவறினால் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் என தமிழக அரசை நீதிமன்றம் எச்சரிக்கையும் செய்துள்ளது. ஆனால், இதற்கும் தமிழக அரச அசைந்து கொடுக்கப் போவதில்லை. அதேநேரம் திரையரங்குகள் நுhதன வழிகளில் தங்களது கொள்ளையை தொடர்கின்றன.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சில திரையரங்குகள் ஆன்லைன் புக்கிங்கை ரத்து செய்துவிடுகின்றன. கவுண்டரில் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன. சில திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக பெறுவதில்லை, டிக்கெட் கட்டணத்தையும் குறிப்பிடுவதில்லை. காட்சி நேரம் மட்டுமே அதில் இருக்கும். நாம் சர்வீஸ் கட்டணமான 35 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினால், அதனை காண்பித்து தியேட்டர் கவுண்டரில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி காண்பித்தால் அது அவர்களுக்கு எதிரான சாட்சியாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு இருக்கும்.

இந்த நூதன கொள்ளை அனைவருக்குமே தெரியும். தெரிந்தும் அரசும், இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வணிகவரித்துறையும் கண்மூடி ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன. காலா விஷயத்தில் நீதிமன்றம் மீண்டும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதற்குப் பிறகாவது இந்த அரசு திரையரங்கு கட்டண கொள்ளையில் கண் திறக்குமா?

×Close
×Close