உலக அளவில் புகழ்பெற்ற ‘எஞ்ஜாயி எஞ்சாமி’ பாடலை எழுதிப் பாடி நடித்த தெருக்குரல் அறிவு, செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் அவர் இல்லாமல் பாடகி தீ பாடிய நிலையில், 'தூங்கும் போது உங்க பொக்கிஷத்தை யாரும் அபகரிக்கலாம்' என்று தெருக்குரல் அறிவு வேதனை தெரிவித்துள்ளார்.
‘என்ஜாயி எஞ்சாமி’ ஆல்பம் பாடல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதில் இருந்த இசை புதுமை பூர்வகுடிகளின் குரல், அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் என எல்லாவிதத்திலும் மொழி, இனம், நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறு வெற்றி பெற்றது. ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடலை எழுதிப் பாடியிருந்தார் தெருக்குரல் அறிவு. இவருடன் சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீயும் பாடி நடித்திருந்தார்.
இந்த நிலையில்தான், சில மாதங்களுக்கு முன், பிரபலமான ஒரு ஆங்கில நாளிதழில், ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலின் வெற்றியையும் இந்த பாடலைப் பாடிய தீ மற்றும் குழுவினரை பேட்டி கண்டு வெளியிட்டது. ஆனால், அதில் தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெறவில்லை. அப்போதே இது சர்ச்சையானது. தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில், ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பாடகி தீ, கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடலைப் பாடகி கிடாக்குழி மாரியம்மாளும் பாடியிருந்தார். ஆனால், அந்த பாடலை எழுதி பாடி நடித்திருந்த தெருக்குரல் அறிவு அழைக்கப்படவில்லை. அப்போதே, விமர்சனங்கள் எழுந்தன. தெருக்குரல் அறிவு ஏன் பாடகி தீ குழுவினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்விகளும் எழுந்தன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கவுரவமிக்க போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இதில் அதிக நாடுகள் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா விளையாடி வருகிறது.
உலக நாடுகளின் கவனத்தைபெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடந்த கலை நிகழ்சியில் பாடப்பட்ட ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை பாடகி தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடினார்கள். ஆனால், அதில், பாடகர் தெருக்குரல் அறிவு இடம் பெறவில்லை. இது குறித்து விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், தெருக்குரல் அறிவு 'தூங்கும் போது உங்க பொக்கிஷத்தை யாரும் அபகரிக்கலாம்' என்று கூறி மௌனம் கலைத்துள்ளார்.
தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், அதில் “நான் என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு “இசையமைத்தேன்” “எழுதினேன்” , பாடினேன்” & “நடித்தேன்”. இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல.
என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இது போல ஒன்று..
இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் அந்த பாடல்கள். இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசுகிறது. ஏனென்றால், நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம்.
நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் முடியாது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்.” என்று பதிவிட்டுள்ளார்.
பாடகர் தெருக்குரல் பிரபலமான தமிழ்ராப் இசைப் பாடகர். போராட்ட களங்களிலும் காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சிகளிலும் சினிமா இசைகளிலும் இவருடைய பாடல் ஒலித்து கவனம் பெற்று வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக ஒலிக்கும் தெருக்குரல் அறிவு எழுதி பாடி நடித்த பாடல் நிகழ்ச்சியில் அவருக்கு இடம் இல்லை என்ற வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.