கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ள நடிகர் விஜய் எங்கு சென்றாலும், ரசிகர்கள் குவிந்து வரும் நிலையில், விஜய் அவர்களுடன் செல்பி எடுக்கும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் முழு நேர அரசியலில் களமிறங்குவதால் இந்த படம் அவரது கேரியரில் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா சென்றுள்ள விஜய்க்கு, அம்மாநில ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். கேரளாவின் திருவனந்தபுரத்தை அடைந்தது முதல், அவர் செல்லும் அனைத்து இடங்களுக்கும் ரசிகர்கள் குவிந்து கொண்டிருப்பதால், அங்குள்ள விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழா காலமாக மாறிவிட்டது.
விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் முன் ரசிகர்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் தான், விஜய் திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்களுடன் பிரம்மாண்ட செல்பி எடுத்துக்கொண்டார். இருப்பினும், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இரண்டாவது நாளிலும் விஜயை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஸ்டேடியத்தில் அலைமோதியது. அதன்பிறகு ரசிகர்களின் மத்தியில் வந்த விஜய் அவர்களுடன் மற்றொரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இதனிடையே கேரளாவில் உள்ள தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள விஜய் அந்த செல்பி வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். என் சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் தாய்மார்கள்! அனைத்து மலையாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த புதிய புகைப்படங்களில், விஜய் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று எடுத்த செல்பி புகைப்படத்திலும் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திலும் விஜய் வித்தியாசமாக இருக்கிறார். இதன் மூலம் படப்பிடிப்பின் போது விஜய் தனது சிறிய மற்றும் வயதான கதாபாத்திரத்தில் ஒரே நேரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. அதேபோல் ரசிகர்கள் அன்பாக அளித்த மாலைகள் மற்றும் சால்வைகளை ஏற்றுக்கொண்டார். மேலும் ஹோட்டலில் அவரைச் சந்தித்த மாற்றுத் திறனாளி ரசிகருடன் போஸ் கொடுப்பதையும் காண முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“