This Week Tamil Movies: இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தனுஷின் பக்கிரி, விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’, புது முகங்கள் நடிப்பில் ‘தும்பா’ மற்றும் ‘மோசடி’ ஆகியப் படங்கள் நாளை வெளியாகின்றன.
பக்கிரி
நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் திரைப்படம் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இதன் தமிழில் ‘பக்கிரி’ என்ற டைட்டிலில் வெளியாகிறது.
சிந்துபாத்
இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார், இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி, அஞ்சலி இதில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து இதனை தயாரித்திருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
ஏற்கனவே ’பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகியப் படங்களின் மூலம் விஜய் சேதுபதி - எஸ்.யூ.அருண்குமார் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 3-வது படமான சிந்துபாத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தும்பா
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கும் படம் ‘தும்பா’. ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.
மோசடி
ஜேசிஎஸ் மூவீஸ் தயாரித்து, கே.ஜெகதீசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். அஜய்குமார், விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், சரவணன், மோகன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.