'தொண்டன்' விமர்சனம்

அவருக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. அவருடைய தங்கையைத் துரத்தித் துரத்திக் காதலித்துக்கொண்டிருக்கும் இளைஞனை திருத்துகிறார்..

பாலாஜி 

நல்ல நடிகராகவும் அர்த்தமுள்ள படங்களை இயக்குபவராகவும் அறியப்பட்டுள்ள சமுத்திரக்கனியின் தொண்டன், அவரது அப்பா முதலான படங்களின் வரிசையில் சேர்ந்துகொள்கிறது.

விஷ்ணு (சமுத்திரக்கனி) ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர். ராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழில் இது. அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் தன் தாய் மரணமடைந்ததால் அவர் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

விஷ்ணு சிறுமை கண்டு பொங்குவார். ஆனால், அவருக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. அவருடைய தங்கையைத் துரத்தித் துரத்திக் காதலித்துக்கொண்டிருக்கும் இளைஞனை (விக்ராந்த்) அவர் திருத்துகிறார். விக்ராந்தும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகி மக்களுக்குச் சேவை செய்கிறார்.

கடமையைச் செய்யும்போது ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் அரசியல்வாதி ஒருவரின் மகனுடன் (நமோ நாராயணன்) இவருக்குப் பகைமை ஏற்படுகிறது. வன்முறை சார்ந்த வழிகளை நாடாமல், அகிம்சை வழியில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதியை வீழ்த்துகிறார்.

படம் முழுவதும் சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளைக் கடுமையாக விமர்சித்து வெளுத்துக் கட்டுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை, விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிக்கட்டு போராட்டம், ஊழல் அரசியல்வாதிகள் என்று எல்லாப் பிரச்சினைகளையும் எடுத்துக்கொள்கிறார். இந்தப் பிரச்சினைகளைக் கதைப் போக்கில் உரிய சம்பவங்களை வைத்துக் கையாளாமல், அறிவுரைகளாகவும் விமர்சனங்களாகவும் பேசித் தீர்க்கிறார்.

ஒருதலைக் காதலைச் சுமந்துகொண்டு பெண்களைத் துரத்துவது, மாடுகளைப் பராமரிப்பது முதலான சில இடங்களில் வசனங்கள் அழுத்தமாக உள்ளன. ஆனால், ஒரு படத்தில் இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால் அதை ஒரு படமாக எப்படிக் கருத முடியும்? ஒவ்வொரு காட்சியும் அறிவுரை சொல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணும் வகையில் உள்ளது திரைக்கதை.

ஒரு சாமானிய மனிதன் அரசியல்வாதியை எதிர்த்து நின்று வெல்லும் விதம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட காட்சிகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் வரும் சமுத்திரக்கனி – சுனைனா காதல் திரைக்கதையில் ஒட்டவே இல்லை. அந்தக் காட்சிகளின் நீளமும் படத்தின் ஓட்டத்தைக் குறைக்கின்றன. விக்ராந்த் திருந்தும் விதமும் செயற்கையாக உள்ளது.

படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்கள் பலரும் சமுத்திரக்கனியின் நேர்மை, துணிச்சல் ஆகியவற்றைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைக் குலைத்துவிடுகிறது.

சமுத்திரக்கனி நடிப்பில் குறைசொல்ல எதுவும் இல்லை. பலமுறை இதேபோன்ற வேடத்தை அவர் கையாண்டிருப்பதால் அனாயாசமாக நடித்திருக்கிறார். விக்ராந்த் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். சுனைனா, அர்த்தனா இருவரும் குறைவைக்கவில்லை.

சிறிது நேரமே வந்தாலும் சூரி பட்டையைக் கிளப்புகிறார். தம்பி ராமய்யா, கஞ்சா கறுப்பு ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், பேராசியர் ஞானசம்பந்தம் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு வலிமை சேர்க்கிறது.

ஜஸ்டின் பிரபாகரின் இசையில் ‘போய் வரவா’, ‘எட்டு ஊரும் கேட்க’ ஆகிய பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை பொருத்தமாக உள்ளது. என்.கே. ஏகாம்பரம், ரிச்சர்ட் எம்.நாதன் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஆம்புலன்ஸ் சேவையின் முக்கியத்துவம், கடமை உணர்ச்சி, பிறருக்கு உதவி செய்யும்போது எந்தத் தடை வந்தாலும் எதிர்த்து நிற்பது, வன்முறையை நாடாமலேயே தவறுகளைத் தட்டிக் கேட்பது முதலான விஷயங்கள் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், திரைப்படத்தின் மொழியில் பேசாமல், அறிவுரைகளைப் பொழிந்துகொண்டிருப்பதுதான் தொண்டன் மீது சலிப்பு ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டது. சமூகத்துக்குத் தேவையான கருத்துக்கள் எவ்வளவுதான் இருந்தாலும், அவை எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும், செய்திகள் மட்டுமே ஒரு படத்தை உருவாக்கிவிடாது அல்லவா?
மதிப்பு: 2.5

×Close
×Close