'25 வயது வரை நான் தற்கொலை மன நிலையில் தான் இருந்தேன்' என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "நான் எனது திறமையை அடையாளம் காணும் முன்பு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். என்னுடைய 25வது வயது வரை, தற்கொலை மனநிலையிலேயே இருந்தேன். ஆனால், அந்தக் கடினமான நாட்கள்தான், எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனநிலையை என்னுள் விதைத்தது. உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம், எனது தந்தையின் இழப்பு.
அவரது திடீர் மறைவு என்னுள் ஒருவகையான வெறுமையை உண்டாக்கியது. அதுவே, ஒருவகையில் என்னை அச்சமற்றவனாகவும் மாற்றியது. இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. எதுவாயினும், ஒன்று உருவாகும் போதே அதன் முடிவும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அப்படியிருக்க எதற்காக நாம் அஞ்ச வேண்டும்?
'பஞ்சதன் ரெக்கார்ட் இன்' என்ற ரெக்கார்டிங் ஸ்டூடியோவை கட்டியபிறகுதான் என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. என் தந்தையின் இழப்பு காரணமாக என்னால் அதிக படங்கள் பண்ண முடியவில்லை. 35 படங்கள் எனக்கு கிடைத்தபோது, நான் 2 படங்களுக்கு மட்டுமே இசையமைத்தேன். இதனால், நீ எப்படி இந்தத் துறையில் பிழைக்கப்போகிறாய்? எனப் பலரும் ஆச்சர்யப்பட்டு கேட்டனர். உன்னிடம் எல்லாம் உள்ளது; அதைப் பற்றிக்கொள் என்றனர். அப்போது, எனக்கு 25 வயது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. எனது 12 முதல் 22 வயதில் நான் அனைத்து இன்னல்களையும் அனுபவித்துவிட்டேன்.
என் உண்மையான பெயரான திலிப் குமார் என்பதை வெறுத்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் அதை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன். உங்களுக்குள் நீங்கள் ஆழமாக இறங்க வேண்டும். உங்கள் மனதின் குரலைக் கேளுங்கள். அது கடினமானது; இருந்தாலும் இதை ஒருமுறைச் செய்துவிட்டால் நம்மையே மறந்துவிடலாம். நான் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல்போகும் சமயங்களில், அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்துகொண்டிருந்தால் சோர்வுதான் ஏற்படும். எப்போதும் புதிதாகவே முயற்சி செய்ய வேண்டும்.
பயணம் செய்வதும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் அதைப் பெரும்பாலான நேரங்களில் செய்யவில்லை என்றாலும், அதுதான் அழகானது. எனக்கு அது மிகவும் உதவுகிறது" என்று ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
வேலையின்மை, குடும்ப பிரச்சனை, சரியான சம்பளம் இல்லாமை என்று வித விதமான பிரச்சனைகளால் தினம் மன அழுத்தத்துடனேயே வாழும் எண்ணற்றவர்களுக்கும், ரஹ்மானின் இந்த வார்த்தைகள் ஆயிரம் வாட்ஸ் பலப் என்பதில் சந்தேகமேயில்லை.