மூன்று மாதங்கள், மூன்று பிளாக் பஸ்டர்கள் - அசத்தும் தெலுங்கு சினிமா

மார்ச் முப்பது முதல் மே நான்குவரை முப்பத்தாறு தினங்களுக்குள் மாதத்துக்கு ஒன்றாக மூன்று பிளாக் பஸ்டர்களை தெலுங்கு சினிமா கொடுத்திருக்கிறது.

பாபு

வெற்றி சதவீதத்தை பொறுத்த வரை தெலுங்கு சினிமா எப்போதும் தமிழ் சினிமாவைவிட பல படிகள் முன்னிலையிலேயே உள்ளது. இந்த வருடமும் வழக்கம் மாறவில்லை. தமிழில் இதுவரை வெளியான படங்களில் கலகலப்பு 2, நாச்சியார் என சில படங்கள் மட்டுமே ஓரளவு வசூலித்துள்ளன. கலகலப்பு 2 படத்தால் எனக்கு லாபமில்லை என்று அதன் தயாரிப்பாளர் சுந்தர் சி. கூறியுள்ளார். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் தயாரிப்பாளருக்கு லாபமாக அமைந்தாலும் சில ஏரியாக்களில் விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் கையை கடித்தது. மொத்தத்தில் ஒரு பிளாக் பஸ்டர் கூட சாத்தியமாகவில்லை.

அதேநேரம் தெலுங்கு சினிமா அசத்துகிறது. நானி தயாரிப்பில் வெளியான ஆவ் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் முதல்நாளில் உலகம் முழுவதும் சுமாராக 46 கோடிகளை வரிலித்தது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 1.01 கோடியை வரிலித்தது. யுஎஸ்ஸில் முதல் ஆறு வாரங்களில் 23.26 கோடிகள். இந்தப் படத்தின் 38 நாள் ஆந்திரா, தெலுங்கானா விநியோகஸ்தர் ஷேர் மட்டும் 90.08 கோடிகள் என அறிவித்துள்ளனர். படம் பிளாக் பஸ்டர். தயாரித்த, வாங்கிய, திரையிட்ட அனைவரும் ஹேப்பி.

ரங்கஸ்தலம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஏப்ரல் 20 ஆம் தேதி மகேஷ்பாபுவின் பரத் அனே நேனு வெளியானது. முதல்நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடிகளை வசூலித்தது. மூன்றாவது நாளில் 100 கோடிகளை கடந்தது. முதல் வார வசூல் 161 கோடிகள் என்று தயாரிப்பாளர் தரப்பு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் ரங்கஸ்தலத்தின் 1.01 கோடி வசூலை கடந்து 1.15 கோடியை வசூலித்தது. யுஎஸ்ஸில் முதல் 3 வாரங்களில் 22.25 கோடிகள். ஆந்திரா, தெலுங்கானா விநியோகஸ்தர் ஷேர் மட்டும் நூறு கோடிகளை தாண்டும் என்கிறார்கள். பாகுபலி சீரிஸை தவிர்த்து வேகமாக நூறு கோடியை கடந்த படம் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.

இவ்விரு படங்களும் ஓடிக்கொண்டிருக்கையில் மே 4 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் வெளியானது. மொத்தம் 207 திரையரங்குகள். தமிழகத்தில் முதல்நாளில் ஒரு கோடியை கடந்ததாக தமிழக விநியோகஸ்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் முதல் மூன்று தினங்களில் தெலுங்குப் பதிப்பு 57.70 லட்சங்களை வசூலித்தது. யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 3.70 கோடிகள். முதல் நான்கு தினங்களில் – அதாவது நேற்றுவரை ஆந்திரா, தெலுங்கானாவில் 30.43 கோடிகள் விநியோகஸ்தர் ஷேராக மட்டும் கிடைத்துள்ளது. ரங்கஸ்தலம், பரத் அனே நேனு அளவுக்கு இந்தப் படம் வசூலிக்கப் போவதில்லை என்றாலும் படம் சூப்பர் ஹிட், சந்தேகமில்லை.

மார்ச் முப்பது முதல் மே நான்குவரை முப்பத்தாறு தினங்களுக்குள் மாதத்துக்கு ஒன்றாக மூன்று பிளாக் பஸ்டர்களை தெலுங்கு சினிமா கொடுத்திருக்கிறது. இப்படியொரு நல்ல வியாபார சூழலை தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கப் போகிறோம்? இருட்டு அறையில் முரட்டு குத்துதான் தமிழ் சினிமாவுக்கான தீர்வா? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

×Close
×Close