செங்கோட்டையன்
ஜூலை 10. தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே மறக்க முடியாத ஒரு நாள். இந்திய சினிமாவின் எபிக் என்று சொல்லப்படும் பிரமாண்ட படம் பாகுபலி வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை பற்றிய ஒரு சிறிய நினைவு கூர்தல் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு.
தென்னிந்திய சினிமா என்றால் தமிழ் சினிமா என்று மட்டுமே பாலிவுட் அறிந்து வைத்திருந்த நேரத்தில் தான் நாங்களும் இருக்கின்றோம் என்று தெலுங்கு சினிமாவை உயர்த்தி தூக்கிப் பிடித்த படம் தான் பாகுபலி. அதற்கு முன்பே ஒரு ராம் கோபால் வர்மா, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம் போன்ற ஒரு சில இயக்குனர்கள் ஒரு சில பிரமாண்டமான படங்களாலும், பாலிவுட் நடிகர்களை தெலுங்கு சினிமாவுக்கு அழைத்து வந்து நடிக்க வைத்ததாலும் தெலுங்கு திரையுலகை பாலிவுட் அறிந்து வைத்திருந்தது. ஆனால் வட இந்தியாவில் இருக்கும் ரசிகர்களுக்கு தெலுங்கு சினிமாவை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் தான் விஜயேந்திர பிரசாத், எஸ் எஸ் ராஜமௌலி என தந்தையும், மகனும் ஒரே மாதத்தில் பாலிவுட், டோலிவுட்டில் பஜ்ரங்கி பைஜான், பாகுபலி என இரண்டு மெகா பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக விளங்கினார். ஒட்டுமொத்த இந்தியாவும் யார் சாமி இவங்க என ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது. இந்தியாவையே மிரள வைத்த படம் பாகுபலி 2 என்றால் அதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது பாகுபலி முதல் பாகம். இவை எல்லாம் சாதாரணமாக ஓரிரவில் நடந்து விடவில்லை. வானளாவிய கனவும், அதை எட்டும் அசாத்தியமான உழைப்பும் தான் இதை சாத்தியமாக்கியது.
பாகுபலி உருவான வரலாறு:
சினிமாவிற்கு வரும் முன்பே, ஆரம்ப காலத்தில் இருந்தே எஸ் எஸ் ராஜமௌலிக்கு சரித்திர படங்களின் மீது பேரார்வம். அந்த பிரமாண்ட படங்களை இயக்க ஆகும் பெரும் பொருட்செலவை தயாரிப்பாளர் தன்னை நம்பி செலவு செய்ய வேண்டும். அதற்கு என்ன தேவை என்று யோசித்தார். நம்பிக்கை தான் முதல் தேவை. தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற, கடுமையாக உழைத்து தோல்வியே கொடுக்காமல் வெற்றிப் படங்களாக கொடுத்து வணிக ரீதியாக தன்னை நிரூபித்தார். அத்தோடு தன்னால் எல்லாம் முடியும் என காட்ட, கதை சொல்லல், கிராஃபிக்ஸ் என ஒவ்வொரு விஷயங்களாக ஒவ்வொரு படத்திலும் புகுத்தி அதிலும் தன் திறமையை நிருபித்தார். யமதொங்கா படத்தில் ஃபேண்டஸி, மகதீரா படத்தில் ஃபேண்டஸி, சரித்திரம், நான் ஈ படத்தில் ஈ பழி வாங்கும் ஃபேண்டஸி கதை என கமெர்சியலோடு சேர்த்து, புதுமை, கிராஃபிக்ஸ் ஆகியவற்றையும் புகுத்தி வெற்றி கண்டார். இதனையெல்லாம் கவனித்து வந்த தயாரிப்பாளர்கள் ராஜமௌலி மீது நம்பிக்கையோடு வந்தபோது ஆரம்பிக்கப்பட்டது தான் பாகுபலி.
முதலில் இரண்டு பாகங்களாக வெளியிடும் எண்ணத்தில் படம் ஆரம்பிக்கப்படவில்லை. படத்தை ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த கதையை இரு பாகங்களாக மட்டுமே வெளியிட முடியும் என்ற நிலைக்கு வந்தனர். ஓராண்டுக்கும் மேல் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்த படம், 2 ஆண்டுக்கு பிறகு 2015 ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கதை சொல்லலில் அவர் பயன்படுத்திய யுக்தி தான் முக்கிய காரணமாக அமைந்தது. படத்தின் முதல் பாகத்திலேயே முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியதோடு, படத்தின் முடிவில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியோடு படத்தை முடித்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மூன்று மடங்கு அதிக வசூலை பெற, இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.
பாகுபலி தருணங்கள்:
பாகுபலி படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளும் மயிர்கூச்செரியும் அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தன. முக்கியமாக படத்தின் இடைவேளை காட்சி இந்திய சினிமாவின் மிக முக்கியமான மாஸ் காட்சிகளில் ஒன்று. கதை நடக்கும் அதே இடத்தில், அதே மாதிரி ஒரு காட்சியை தான் இரண்டாம் பாகத்தின் இடைவேளையிலும் வைத்திருப்பார் ராஜமௌலி. ஆனால் இரண்டுமே ரத்தத்தை சூடாக்கும் உச்சக்கட்ட மாஸ் காட்சிகள்.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் 30 நிமிட போர்க்கள காட்சிகள் இந்திய சினிமா ரசிகர்களுக்கே ஒரு புதிய, உற்சாகமான அனுபவம். ரிலீஸுக்கு ஓராண்டுக்கு முன்பே படத்தின் கிராஃபிக்ஸ் முடிவடையாத போர்க்கள காட்சிகள் லீக் ஆனாலும், இது ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியது. அதில் வந்த காலகேயர்கள் கதாபாத்திரம், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகமான மொழி, ஒரு தனி உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும்.
இன்னொரு மிக முக்கியமான தருணம் கிளைமாக்ஸில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியோடு முடித்தது தான். மரகதமணியின் பாடல் இசையை விட பின்னணி இசை படத்தை தூக்கி உச்சாணிக் கொம்பில் வைத்தது. போர்க்கள காட்சிகளாகட்டும், இடைவேளை காட்சியாகட்டும், கிளைமாக்ஸ், அது முடிந்த பிறகு வரும் கிரெடிட்ஸ் இசையாகட்டும் படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றது அவரது இசை.
கதாபாத்திர தேர்வு படத்தின் மிகப்பெரிய பலம். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை அந்த கதாபாத்திரமாகவே பார்க்க வைத்தது எஸ் எஸ் ராஜமௌலியின் மேஜிக். ராஜமாதா சிவகாமி தேவி, கட்டப்பா கதாபாத்திரங்களின் வீச்சு காலத்துக்கும் அழியாதவை.
வியாபாரம் மற்றும் உலகளாவிய சந்தை உருவாக்கம்:
தெலுங்கு சினிமாவில் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான முதல் படம் பாகுபலி தான். உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான பாகுபலிக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளில் தெலுங்கு படங்களின் மார்க்கெட் அமெரிக்காவில் மட்டுமே இருந்தது. அதை பாகுபலி விரிவுபடுத்தியது. ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஒரு சில ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தெலுங்கு சினிமாவுக்கு மார்க்கெட் உருவாக பாகுபலி முக்கிய காரணம். கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிரி புதிரி வசூலை வாரிய பாகுபலி, தமிழ்நாட்டிலும் வசூல் சுனாமியை வீச தவறவில்லை. முன்னணி முதல் தர ஹீரோ படத்துக்கு இணையான வசூலை குவித்தது பாகுபலி.
வட இந்தியாவில் கரண் ஜோகர் உதவியை நாடி, மிக குறைந்த விலைக்கு (10 கோடி) படத்தை விற்றது பாகுபலி குழு. அங்கேயும் வரலாறு காணாத அளவில் 150 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. 10 கோடிக்கு படத்தை வாங்கியவருக்கு செலவு, ஷேர் போக கிட்டத்தட்ட 50 கோடி லாபம்.
இத்தனைக்கும் படம் வெளியான வாரத்திற்கு முந்தைய வாரம் கமல் நடித்த பாபநாசம், அடுத்த வாரத்தில் தனுஷ் நடித்த மாரி, சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படங்கள் போட்டி போட்டாலும் சிங்கமாக சிங்கிளாக பாக்ஸ் ஆஃபீஸை அடுத்து நொறுக்கியது பாகுபலி.
படத்தின் முதல் காட்சியில் பல இன்னல்களுக்கு பிறகும், உயிர் போகும் தருவாயில் நீரில் மூழ்கியபடி பாகுபலியை உயர்த்தி பிடித்து காப்பாற்றுவார் சிவகாமி தேவி. அந்த மாதிரி ஒரு நிலையில் தான் பாகுபலி தயாரிப்பாளர்களும், எஸ் எஸ் ராஜமௌலியும் பாகுபலியை உயர்த்தி பிடித்து தெலுங்கு சினிமாவுக்கு புத்துயிரையும், புத்துணர்ச்சியையும் அளித்திருக்கிறார்கள். இன்று தெலுங்கு சினிமா உலகளாவிய அளவில் பேசப்படுகிறதென்றால் அதற்கு விதை எஸ் எஸ் ராஜமௌலி போட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.