/indian-express-tamil/media/media_files/Ye6Z8VM0jpVEKZxseRSV.jpg)
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் சினிமா வாய்ப்புக்காகப் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டார். பிற்காலத்தில் கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த அவர், ஒரு காலத்தில் சாதாரண கலைஞனாகத் தனது திறமையை நிரூபிக்க, 17 நாட்கள் காத்திருந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து நடிகர் சிவக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ யான் பெற்ற இன்பம் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர், தனது வாழ்க்கைப் பயணத்தின் தொடக்க காலத்தில் ஒரு படப்பிடிப்பில் தனக்கான காட்சிக்காகக் கிட்டத்தட்ட 17 நாட்கள் காத்திருந்தார். தினசரி மேக்கப் போட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவின் அழைப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தபோதும், அவருக்கு ஒரு காட்சி கூட கிடைக்கவில்லை. மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் இது அவருக்குப் பெரும் சுமையாக இருந்தது.
17வது நாள், இயக்குநரான எலிசா தங்கராஜ், போலீஸ் வேசத்திற்காக எம்.ஜி.ஆரிடம் சைக்கிள் ஓட்டத் தெரியுமா என்று கேட்டார். தனக்கு சைக்கிள் இல்லாததால், அருகே இருந்த ஒரு டீக்கடையில் இருந்து சைக்கிளை எடுத்துவந்து ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக, சைக்கிளின் உண்மையான உரிமையாளர் அங்கு வந்து, எம்.ஜி.ஆரைப் பார்த்து "திருடன்" என்று கூச்சலிட்டார்.
இந்த வார்த்தைகள் எம்.ஜி.ஆரை மனதளவில் மிகவும் பாதித்தன. உடனடியாக அவர் சென்று, "நான் 17 நாட்களாக மேக்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கிறேன், ஒரு காட்சி கூட எடுக்கவில்லை. இந்த சைக்கிள் இல்லை என்றால் இன்றும் எனக்கு ஷாட் வராது, நான் ஒரு திருடன் இல்லை" என்று வருத்தத்துடன் கூறினார். இந்த வார்த்தைகள், ஒரு கலைஞனின் கனவுக்கும், யதார்த்தத்துக்கும் இடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தியது. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கு அது தாங்க முடியாத சோகமாய் இருந்துள்ளது.
பின்னர், அந்த சைக்கிளின் உரிமையாளர்தான், புகழ்பெற்ற சிவாஜியின் 'பராசக்தி' திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் எம்.ஜி.ஆரின் பிற்கால வெற்றிக்கு ஒரு பாடமாக அமைந்தது. பின்னர் அவரது இயக்கத்திலேயே பெத்தாதான் பிள்ளையா படத்தில் ஹீரோவாக நடித்தார்.
ஒரு காலத்தில் ஒரு காட்சிக்காக 17 நாட்கள் காத்திருந்தவர், பிற்காலத்தில் இந்திய சினிமாவையும் அரசியலையும் ஆட்சி செய்தார் என்பது, அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் உழைப்புக்கு ஒரு சிறந்த சான்றாக இன்றும் பேசப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.