/indian-express-tamil/media/media_files/2025/04/24/VReZq1mGxa9QhPkcXIvA.jpg)
சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல், அஜித் - விஜய் போன்ற ஆளுமைகளின் வரிசையில், தமிழ் சினிமாவில் வேறு இரண்டு பெயர்கள் நிலைத்திருக்குமென்றால் அவை வடிவேலு - விவேக் ஆகியோராக தான் இருக்க முடியும்.
காமெடி உலகில் இவர்களின் இடங்களை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பது இப்போது தமிழ் சினிமா நகைச்சுவையில் நிலவும் வறட்சியின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ காமெடியன்கள் முயன்றாலும், இவர்களை போன்று மக்களை மகிழ்விக்க முடியவில்லை என்று சாமானியர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.
விவேக்கின் மறைவு மற்றும் வடிவேலு இப்போது காமெடி வேடங்களில் அதிகமாக நடிக்காமல் இருப்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நிதர்சனம். படங்களை தவிர கலை நிகழ்ச்சிகளிலும் இவர்கள் சேர்ந்து செய்த அதகளம் சுவாரசியமாக இருக்கும்.
உடல் மொழியில் காமெடி செய்வது வடிவேலுவிடம் மிக இயல்பாக காணப்படும். மறுபுறம், வசனங்களில் கவுண்டர் கொடுப்பது விவேக்கின் பாணி. இப்படி இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த அட்டகாசத்தை, ஒரு நேர்காணலில் விவேக் நினைவு கூர்ந்திருப்பார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழில் வெளியான பிரம்மாண்ட படங்களில் 'எந்திரன்' திரைப்படத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது. திரைப்படத்தை போலவே இதன் இசை வெளியீட்டு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை போன்று, வடிவேலு - விவேக் காம்பினேஷனில் மேடையில் நடந்த உரையாடல் பலரது ஃபேவரட்டாக அமைந்தது.
குறிப்பாக, வடிவேலு தொடர்ச்சியாக ஜோக்குகளை சொல்லி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த விவேக் சட்டென, நல்லா பேசுறீயே... நேத்தே எழுதி வாங்கிட்டியா? என்று கேட்டு வடிவேலுவை கலாய்ப்பார். இதை கேட்டு அங்கு அமர்ந்திருந்த ரசிகர்கள், கலைத்துறையினர் அனைவரும் அரங்கம் அதிர சிரித்தனர். இந்த நிகழ்வை விவேக் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.