/indian-express-tamil/media/media_files/2025/06/03/rLLC9FesGd09CXROXZ2l.jpg)
கமல்ஹாசனும், மணிரத்னமும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் "தக் லைப்" திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூன் 5) வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை. முதல் நாளில் இப்படம் வெறும் ரூ17 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளதாகத் திரையுலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், கமல்ஹாசன் கன்னட மொழி குறித்துக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களும், அதன் காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட மறைமுகத் தடையுமே ஆகும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இண்டஸ்ட்ரி டிராக்கர் சக்னில்க் (Sacnilk) தகவல்படி, "தக் லைப்" முதல் நாளில் ரூ17 கோடி வசூல் செய்துள்ளது. இது கமல்ஹாசனின் முந்தைய படமான "இந்தியன் 2" (ரூ25.6 கோடி) மற்றும் மணிரத்னத்தின் கடைசிப் படமான "பொன்னியின் செல்வன் 2" (ரூ24 கோடி) ஆகியவற்றை விட மிகக் குறைவு. படத்தின் திரையரங்கு நிரம்பல் விகிதத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 52% ஆகவும், தெலுங்கில் 21% ஆகவும், இந்தியில் வெறும் 6% ஆகவும் இருந்துள்ளது.
சென்னையில் 1000க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு, சுமார் 70% நிரம்பல் விகிதத்தைப் பெற்றுள்ளன. ஆனால், டெல்லி-NCR பகுதியில் 400க்கும் மேற்பட்ட இந்தி காட்சிகள் 4.5% மட்டுமே நிரம்பி இருந்தன. இதேபோல, ஹைதராபாத்தில் 400க்கும் மேற்பட்ட தெலுங்கு காட்சிகள் 19% நிரம்பல் விகிதத்தைப் பெற்றன. அதேபோல் "தக் லைப்" படத்திற்குச் சுமாரான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இது நீண்டகாலத்தில் படத்தின் வசூலைப் பாதிக்கலாம்.
கமல்ஹாசனின் கடைசிப் படமான "இந்தியன் 2" (2024 ஜூலை வெளியீடு) பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரூ25.6 கோடி வசூலித்தாலும், பின்னர் சரிந்து, மொத்த வசூல் ரூ81.32 கோடியுடன் உள்நாட்டு வசூலை முடித்துக் கொண்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022-ல் வெளியான "விக்ரம்", கமல்ஹாசனின் மிகப்பெரிய வெற்றியாகும். அப்படம் ரூ32 கோடியில் தொடங்கி, சுமார் ரூ250 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னத்தைப் பொறுத்தவரை, "தக் லைப்" வசூல் அவரது "பொன்னியின் செல்வன்" படங்களை விடக் குறைவாக உள்ளது. "பொன்னியின் செல்வன் முதல் பாகம்" (2022) ரூ34 கோடியுடன் தொடங்கி ரூ266 கோடியை வசூலித்தது. இரண்டாம் பாகம் (2023) ரூ24 கோடியுடன் தொடங்கி, ரூ180 கோடிக்கும் மேல் வசூலித்தது. "தக் லைப்" இந்த வெற்றிப் பாதையைப் பின்பற்றுமா என்பது போகப் போகத் தான் தெரியும். ஆனால், நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த கூட்டணி, ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தற்போது வரை தெரிகிறது.
"தக் லைப்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன் உரையாடும்போது, கமல்ஹாசன், "உங்கள் மொழி தமிழிலிருந்து பிறந்தது" என்று கூறினார். இந்த கருத்துக்குப் பல்வேறு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) "தக் லைஃப்" படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அச்சுறுத்தியது.
சமீபத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், இந்த சர்ச்சை குறித்து நேரடியாகப் பேசாத கமல்ஹாசன், தமக்கு ஆதரவாக நின்ற தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். "எனக்குத் துணையாக நின்ற தமிழகம் முழுவதற்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். பொதுக்கூட்டங்களில் நான் பயன்படுத்தும் 'உயிரே, உறவே, தமிழே' என்ற சொற்றொடரின் பொருளை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். நான் அதில் உறுதியாக நிற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த கன்னட மொழி விவகாரம், "தக் லைப்" படத்தின் முதல் நாள் வசூலை கணிசமாகப் பாதித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.