விஜய் தான் நம்பர் 1 ஸ்டார், அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியிருப்பதற்கு, சூப்பர் ஸ்டார் என எங்களுக்கு தெரியாதா என திருப்பூர் சுப்ரமணியன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
விஜய், அஜித் படங்கள் தனித்தனியாக வெளியானலே சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே மாறி மாறி கருத்துக்கள் பகிரப்பட்டு வரும். இந்தநிலையில், இருவரின் படங்களும் இந்த பொங்கலுக்கு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதுவும் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு வெளியாக உள்ளதால், இருவரின் ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் போட்டியை ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்: அவதாருக்கு ரெட் சிக்னல் காட்டிய தமிழக தியேட்டர்கள்: காரணம் இதுதானாம்!
இந்தநிலையில், விஜயின் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஹீரோ. அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித். இரண்டு படங்களுக்கும் தலா 400 தியேட்டர்கள் ஒதுக்குவது சரியாக இருக்காது. வாரிசுப் படத்துக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு அஜித்தின் துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலினை சந்திக்கப் போகிறேன் என கூறினார். இதற்கு அஜித் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கதலைவரும், பிரபல திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் காட்டமாக எதிர்வினையாற்றியுள்ளார்.
திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, ஹைதராபாத்தில் இருந்துக் கொண்டு எந்த அர்த்தத்தில் தில் ராஜூ இப்படி பேசுகிறார் என புரியவில்லை. துணிவு படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டாலும் இன்னும் ஒரு தியேட்டர் கூட முடிவாகவில்லை. ஒருவேளை உதயநிதி துணிவு படத்துக்கு என தியேட்டரை ப்ளாக் செய்து வைத்திருந்தால் அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஏதோ யூகத்தில் தான் தில் ராஜூ இப்படி பேசியிருக்கிறார்.
திரையரங்க உரிமையாளர் அஜித், விஜய் என பாகுபாடு பார்ப்பதில்லை. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் புக்கிங் கொடுத்த பிறகே முடிவு செய்வார்கள். அதற்குள் எங்கள் படத்திற்கு அதிக தியேட்டர் வேண்டும் என கேட்டால் கொடுத்து விடுவார்களா? விஜய் தான் நம்பர் 1 ஸ்டார் என கூறியிருக்கிறார் தில் ராஜூ. ஆனால் இங்கு நம்பர் 1 ஸ்டார் கதைதான். கதை நல்லா இருந்தா எந்த நடிகரின் படமும் ஓடும். அடுத்தடுத்து விஜய், அஜித், கமல் படங்கள் எல்லாம் வந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் வசூலை வாரிக் குவித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அப்போ பொன்னியின் செல்வனில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவியை நம்பர் 1 ஸ்டார் என சொல்லிவிட முடியுமா? அல்லது அஜித், விஜய்யை விட விக்ரம் படம் மூலம் ஹிட் கொடுத்த கமலை நம்பர் 1 ஸ்டார் என சொல்லவிட முடியுமா? கதை நல்லா இருக்குனு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை எடுத்தது தெலுங்கு தயாரிப்பாளர் தான். ஆனால் படம் தமிழ்நாட்டில் சரியாக போகவில்லை. அதுக்காக சிவகார்த்திகேயன் சுமாரான ஸ்டாருனு சொல்ல முடியுமா?
நடிகர்களின் முகத்திற்காக மட்டுமே மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதில்லை. எங்களுக்கு தெரியாதா யாரு பெரிய ஸ்டாருனு? எந்த கதை நல்லா இருக்கோ அதுதான் பெரிய ஸ்டார். தான் தயாரித்த படத்தின் ஹீரோ தான் பெரிய ஹீரோ என அவரே சொல்வதில் நியாயம் இல்லை. விஜய்யை வைத்து படத்தை எடுத்துவிட்டோம் என தேவையில்லாமல் பேசி பிரச்சனை செய்ய வேண்டாம். அநாவசியமாக தில் ராஜூ வம்பிழுக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil