Salman Khan | Tirupur Subramaniam: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12ம்தேதி) நாடு முழுதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக தமிழில் ஜப்பான், ஜிகர்தண்டா, கிடா, ரைடர் போன்ற படங்கள் வெளியாகின. இதேபோல், இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் நடிகர் சல்மான் கான் - கத்ரீனா கைஃப் நடித்த டைகர் -3 படம் வெளியாகியது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
சல்மான் கானின் டைகர் -3 படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்ட வெளியாகிய நிலையில், படத்தை திருப்பூரில் 'சக்தி சினிமாஸ்' திரையரங்கம், அதிகாலை 7 மணிக்கே வெளியிட்டதாக புகார் எழுந்தது. அதாவது, படத்தை ஸ்பெஷல் ஷோ-வாக காலை 7:10, 7:25, 8:10, 8:25 உள்ளிட்ட 6 காட்சிகளை திரையிட்டுள்ளனர். இது தொடர்பான ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் ஸ்கிரீன் ஷாட்-களும் இணையத்தில் வெளியாகிய வைரலாகியது.
இந்நிலையில், அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சி போட்ட சக்தி சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசாணையை மீறி டைகர் 3 படத்தை திரையிட்டது குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் எந்த படத்துக்கும் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்றும், ஸ்பெஷல் ஷோ அனுமதி பெற்றால் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்து இருந்தது. அண்மையில் லியோ படத்திற்கு 'ஸ்பெஷல் ஷோ' அனுமதி கேட்ட விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“