தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ,ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம். அதோடு மட்டுமல்லாமல், கோவை ,ஈரோடு நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து வந்தார். இதில் அவ்வப்போது திரையரங்குகள் குறித்து எழும் புகார்கள் குறித்து யூடியூடிப் சேனல்களுக்கு அளிக்கும் பேட்டியில் விளக்கம் அளித்து வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான லியோ படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த திருப்பூர் சுப்பிரமணியம், லியோ படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம். தெரிந்தேதான் இந்த படத்தை திரையிட்டோம். ஏனென்றால் தீபாவளி வரை வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து லியோ படத்திற்கு எதிராக இருந்ததால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை விமர்சித்தனர்.
இதனிடையே தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரைடு ஆகிய படங்கள் வெளியானது. இதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதி அளிக்காத நிலையில், திருப்பூரில் உள்ள சுப்பிரமணியனின் சொந்த திரையரங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார் எழுந்துது.
இந்த புகார் குறித்து நேரில் ஆய்வு செய்த தாசில்தான் இது தொடர்பான ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இது குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சங்க செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது சொந்த வேலை காரணமாக நமது சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கத்தான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.