'Titanic' star Kate Winslet talks about her backpack trip to India : 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியானார்டோ டி கேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் நடிப்பில் வெளியானது டைட்டானிக் திரைப்படம். 1912 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கப்பல் விபத்தினை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் ரோஸாக கேட் வின்ஸ்லெட்டும், ஜேக்காக லியானார்டோவும் நடித்திருந்தனர்.
இந்த படம் ஹாலிவுட்டில் மட்டும் இல்லாமல், உலக அளவில் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இந்த ஜோடியை காதலுக்கு இலக்கணமாகவே கொண்டாடினார்கள் அன்றைய இளைஞர்கள். இந்த படம் குறித்து சமீபத்தில் கேண்டிஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் தன்னுடைய இந்திய பயணம் குறித்தும், தன்னை மக்கள் எவ்வாறு ரோஸாக ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறித்தும் பேசினார்.
”டைட்டானிக் வெளியாகி 2 வருடங்கள் கழித்து தனியாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இமயமலை சரிவில் அமைந்திருக்கும் இடத்தில் நான் என்னுடைய பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது 83 வயது மிக்க ஒருவர், என்னை பார்த்து “நீங்கள் ரோஸ் தானே” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்றேன். உடனே அவருடைய நெஞ்சில் கையை வைத்து “மிக்க நன்றி” என்று கூறினார். இந்த நிகழ்வு என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது. கண்ணீர் மல்க அங்கிருந்து நான் நகர்ந்து சென்றேன்” என்று கூறியுள்ளார். இந்த படம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், வெற்றியையும் பெற்றுத் தந்தது என்று கூறியுள்ளார் கேட்.