காந்தக் குரலோன் டி.எம். சௌந்தரராஜன், விரதம் இருந்து, வாரியார் சுவாமிகளிடம் ஆலோசனைக் கேட்டு சிரமப்பட்டு சிரத்தையுடன் பாடிய ஒரு பாடல் ஒன்று உள்ளது. டி.எம்.எஸ் பாடிய 10,000 பாடல்களில் அவர் ரொம்ப ரிஸ்க் எடுத்து பாடிய பாடல் என்ன பாடல் என்று பார்ப்போம்.
பாடகர் டி.எம். சௌந்தரராஜன் ரசிகர்களால் டி.எம்.எஸ் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். டி.எம்.எஸ் என்றால், அவருடைய காந்தக் குரலும் அவர் நடித்த ஒருசில படங்களும் நினைவுக்கு வரும்.
டி.எம்.எஸ் நடித்த படங்களில் ஒன்றுதான் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், ஜி.ஆர். ராமநாதன், டி.ஆர். பாப்பா இருவரும் சேர்ந்து இசையமைத்த அருணகிரிநாதர் திரைப்படம். இந்த படத்தில் டி.எம். சௌந்தரராஜன் அருணகிரிநாதராக நடித்துள்ளார்.
அருணகிரிநாதர் படத்தில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இந்த படத்திற்கு இசையமைத்த டி.ஆர். பாப்பா, டி.எம்.எஸ்-ஐ அழைத்து, இந்த படத்தில் நீங்கள் ஒரு பாடலைப் பாடுகிறீர்கள். இது வழக்கமான பாடல் இல்லை. இது ஒரு சந்தப் பாடல், அருணகிரிநாதர் முருகபெருமான் மீது உள்ள பக்தியால் மனமுருகிப் பாடிய பாடல், அதனால், கவனமாகப் பாட வேண்டும், இந்தப் பாடலை உங்களுக்கு எப்போது பாடத் தோன்றுகிறதோ அப்போது பாடுங்கள், பாடல் பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேட்ட, பாடகர் டி.எம்.எஸ், இந்த பாடலைப் பக்தி சிரத்தையுடன் பாட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு இந்த பாடல் பாடுவதற்காக விரதம் இருக்கிறார். பாடலை மனதிற்குள்ளே பாடிப் பார்க்கிறார். அவரால் அந்த பாடலைப் பாட முடிகிறதே தவிர, பாடலின் பொருள் தெரியவில்லை. அதனால், டி.எம்.எஸ், கிருபானந்த வாரியார் சுவாமிகளைச் சந்தித்து, தான் அருணகிரிநாதர் படத்தில் அருணகிரிநாதர் வேடத்தில் நடிக்கிறேன். அவர் பாடிய இந்த பாடலைப் பாடுகிறென். இந்த பாடலுக்கு என்ன பொருள் என்று கேட்கிறார். கிருபானந்த வாரியாரும் பாடலுக்கு பொருள் கூறுகிறார். பாடலின் பொருளைத் தெரிந்துகொண்ட டி.எம்.எஸ் நன்றாகப் பாடலை மனப்பாடம் செய்து பாடி பயிற்சி செய்கிறார். பிறகு, டி.ஆர். பாப்பாவிடம் சென்று தான் பாடலைப் பாடத் தயார் என்று கூறுகிறார்.
பாடல் பதிவு அன்று பாடகர் டி.எம்.எஸ் விரதம் இருந்து பாடுவதற்கு செல்கிறார். அங்கே டி.எம்.எஸ் பாடுவதற்கு முன்பு சிறிது நேரம் அமைதியாக இருந்து முருகப்பெருமானை வேண்டிய பிறகு, இந்த பாடலைப் பாடியுள்ளார். பாடுவதற்கு முன்பு அந்த பாடலின் முதல் 2 வரிகளைச் சொல்லி அதன் பிறகே பாடியிருக்கிறார். அந்த பாடல்தான், அழியாப் புகழ்பெற்ற ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் அருணகிரிநாதர் பாடல். இந்த பாடல் இன்றைக்கும் அமரத்துவம் மிக்க பாடல்தான். டி.எம்.எஸ் பாடிய 10,000 பாடல்களில் அவர் ரொம்ப ரிஸ்க் எடுத்து பாடிய பாடல் இதுதான்.
ஆனால், டி.எம்.எஸ் இந்த பாடலை கச்சேரிகளில் பாடுவதைத் தவிர்த்துள்ளார். ஏனென்றால், விரதமிருந்து பக்தி சிரத்தையுடன் பாடிய இந்த பாடலை, கச்சேரிகளில் சும்மா பாடக்கூடாது. கச்சேரிக்கு வருகிறவர்கள் எல்லா மனநிலையிலும் இருப்பார்கள் என்பதால், அந்த பாடலின் புனிதத் தன்மைக்கு குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காக கச்சேரிகளில் பாடுவதைத் தவிர்த்துள்ளார். இந்த தகவலை யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“