தி கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அதை ஏன் வாங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் கடந்த மே 5-ந் தேதி வெளியானது. கேரளாவில் இந்து பெண்கள் முஸ்லீம் இளைஞர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்து விடுகிறார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 5-ந் தேதி பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்குவங்கம் தடை விதித்துள்ள நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமிழகத்திலும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அந்த படத்தை எதற்காக வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
இந்தியாவில் ஒரு படம் வருவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பாஜக, காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகள் இதை தடை செய்ய முடியாது. தி கேரளா ஸ்டோரி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவம் உண்மைதான். ஆனால் அது எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது.
நீங்கள் சொல்லது போல் தி கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் அதை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஏன் வாங்கி வெளியிட வேண்டும்? ரெட் ஜெயிண்ட் கருத்துரிமை என்பதற்காக வாங்கி இருக்கிறது என்றால் உதயநிதி தனது தந்தை முதல்வரிடம் சொல்லி படத்தை போட்டிருக்கலாமே என்று கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“