ஆச்சரியத்தில் ஆழ்த்திய லதா மங்கேஷ்கர்:
நினைவலைகளை பகிர்ந்த நாகார்ஜுனா
இந்திய திரையுலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருந்தாலும் தெலுங்கு திரைப்படத் துறையை பொறுத்தவரை அவர் இரண்டே இரண்டு பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார்.
1955 இல் நாகேஸ்வரராவ் நடித்த சந்தானம் என்கிற படத்தில் முதல்முறையாக தெலுங்கில் பாடினார்.
அதன்பிறகு 33 வருடங்கள் கழித்து மீண்டும் 1988இல் நடிகர் நாகார்ஜுனாவின் ஆக்ரி போராட்டம் என்கிற படத்தில் தான் பாடினார்.
இப்படி தெலுங்கில் அவர் பாடிய இரண்டு பாடல்களும் தனக்கும் தனது தந்தையின் படங்களுக்கு மட்டுமே என்கிற தகவலை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் நாகார்ஜுனா.
அவர் மேலும் கூறுகையில், அந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். அவர்தான் லதா மங்கேஷ்கரை பாட வைக்கலாம் என்று யோசனை கூறினார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு நானும் சென்றுவிட்டேன். அவர் எப்படி தெலுங்கை உச்சரிக்கிறார் என்று பார்க்கப்போனேன். ஆனால், அவர் சிறப்பாக பாடினா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்றார்.
வித்தியாசமான இசை, டீசரில் அசத்தும் அமிதாப்!
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடி தேடி நடிப்பவர். வயதுக்கு தகுந்த வேடங்களை ஏற்று நடித்து அவரது ரசிகர்களுக்கு சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் ஹிந்தியில் நடித்துள்ள ஜுந்த் என்ற படம் மார்ச் மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளளது. இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியானது.
டீசரில் கலக்கலான பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது.
சுவரி ஏறி அமர்ந்திருக்கும் இளைஞர்களிடம் நடந்து செல்கிறார் அமிதாப்.
பின்னர், அவரது பின்னால் அந்த இளைஞர்கள் இறங்கி நடந்து வருகின்றனர்.
இந்தப் படம் கால்பந்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.
பாடகி லதா மங்கேஷ்கர் உடனான
நினைவலைகளை பகிர்ந்த பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) உடல்நலக் குறைவால் காலமானார். அவருடனான நினைவுகளை பல்வேறு திரைப் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றன.
ஆஷிக் 2, பாகி, ஏக் வில்லன், சாஹோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள பாலிவுட் முன்னணி நடிகை ஷரத்தா கபூரும் லதா மங்கேஷ்கர் உடனான தனது இளம் வயது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்களுடன் பொன்னான தருணங்களைப் பகிர்ந்து கொண்டதன் பெருமையை நான் என்றும் போற்றிப் பாதுகாப்பேன். என் தலையில் உங்கள் கை வைத்து நீங்கள் ஆசிர்வதித்தது, உங்கள் கனிவான பார்வை, ஊக்கம் தரும் உங்கள் அன்பான வார்த்தைகள். உங்கள் எளிமை, தெய்வீகம், மேன்மை மற்றும் கருணைக்கு நன்றி. உங்களை எப்போதும் நேசிக்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஷரத்தா கபூர்.
அவருடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.
லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கில் ஷரத்தா கபூரும் கலந்துகொண்டார்.
இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட
தெலுங்கு முன்னணி நடிகர்
நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவார்.
இவரது படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.
ஸ்பைடர், பரத் எனும் நான், மகரிஷி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டது குறித்து பேசியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது "சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நான் எனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். என்னுடன் இயக்குனர் மெஹர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இரண்டு இளம் பெண்கள் என்னிடம் ஆட்டாேகிராப் கேட்டனர். குடும்பத்தினருடன் இருப்பதால் ஆட்டோகிராப் போட மறுத்துவிட்டேன். பின்னர் தான் அவர்கள் இருவரும் இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதே ஹோட்டலில் இருந்த ஷங்கரை சந்தித்து மன்னிப்பு கோரினேன். அவர் பெருந்தன்மையுடன் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார் என்றார்.
டிரைலர்: 2 கோடி முறை பார்க்கப்பட்டு சாதனை
பாலிவுட் முன்னணி நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை பூமி பட்னேகர் ஆகியோர் நடிப்பில் பதாய் தோ என்ற படம் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் ஜனவரி 25ஆம் தேதி யூடியூப் தளத்தில் வெளியானது. இப்போது வரை 2 கோடிக்கு அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ராஜ்குமார் ராவ் காவல் துறை அதிகாரியாகவும், பூமி பட்னேகர் உடற்கல்வி ஆசிரியராகவும் நடித்துள்ளனர்.
காதல், திருமணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்று டிரைலரை பார்ப்பதன் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
"திரைப்படத் தயாரிப்பாளர்கள், வித்தியாசமான உள்ளடக்கத்தை உருவாக்கி, தனித்துவமான ஒரு புராஜெக்ட்டை கொண்டு வந்தனர். அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றதை நான் முழுமையாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்" என்று பூமி பட்னேகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11-ஆம் தேதி பதாய் தோ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.