தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்க்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கங்கனா ரனாவத், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கு இந்நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.
தேசிய விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வழங்கப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிக்கு விழாவில் கலந்துக் கொண்ட அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
விருது பெற்ற பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கௌரவமிக்க இந்த விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த தாதாசாகேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கௌரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே.பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர், அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.
எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த் என்று கூறினார்.
இந்த நிலையில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, அவரது மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருது பெற்ற ரஜினிகாந்த்க்கு பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன் நாளாகும். இந்திய திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளரான நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ் திரையுலகை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விருது வென்ற மற்ற கலைஞர்களுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil