தமிழகத்தின் மையமாக கருதப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய நிலையில் சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொண்டது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம்தான் பிரதான அடையாளமாக திகழ்ந்தது.
இந்த பேருந்து நிலையத்துக்கு, சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை என பல்வேறு மாநகரங்களில் இருந்தும், திருப்பதி, பெங்களூர், எர்ணாகுளம் என பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளதுபோல் வேறு எங்கும் இந்த சிறப்பு இல்லை.
இதனால், 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டது. 1966-ம் ஆண்டு ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வராக இருந்த பக்வத்சலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இதனால், மத்திய பேருந்து நிலையம் ‘ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் காலத்தில், மத்திய பேருந்து நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/16/trichy-2025-07-16-18-11-19.jpg)
தற்போது 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மத்திய பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க 53 ஆண்டுகள் பழமையான திருச்சி மத்திய பேருந்து நிலையம் இன்றுடன்(ஜூலை 16) தனது வெளியூர் பேருந்துகள் இயக்க சேவையை நிறுத்திக்கொண்டது. வெளியூர் பேருந்துகள் இங்கு வந்து செல்லுமே தவிர, இனிமேல் நகரப் பேருந்துகள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட உள்ளதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இன்று காலை முதல் வெறிச்சோடி, ஏதோ பந்த் நடப்பதுபோன்றதொரு காட்சிப்பொருளாக தற்போது மாறியிருக்கின்றது.
இதனால் மத்தியப்பேருந்து நிலையத்தை கருப்பொருளாக வைத்து இங்கு இயங்கி வந்த சிறுகுறு வர்த்தக நிறுவனங்கள், பிரம்மாண்ட விடுதிகள் என பலதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும், மதுரை, சென்னை போல் திருச்சியில் திறக்கப்பட்டிருக்கும் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தால் திருச்சி மக்கள் மத்தியில் சிறு சிறு பாதிப்புகள் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது.
பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகரான அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட திருச்சி கலைஞர் ஒருங்கிணைந்த பிரமாண்டமான பேருந்து முனையம், 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.408.36 கோடி செலவில் கடந்த மே 09-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களில் அறிவிக்கப்பட்டு திமுக ஆட்சிக்காலத்திலேயே திறக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், வெறிச்சோடி கிடக்கும் தற்போது உள்ள மத்திய பேருந்து நிலைய பகுதியில் வணிக வளாகங்கள், மால்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளடக்கிய ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வர மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் திருச்சி மக்கள் பொழுதுபோக்குவதற்கான சிறந்த இடமாக மத்திய பேருந்து நிலையம் மாறும் என பேசப்பட்டு வருகின்றது.
க.சண்முகவடிவேல்