Trisha | அதிமுகவில் சேலம் மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு சமீபத்தில் வலையொளிக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் வாய்க்கு வந்தப்படி பேசியிருந்தார்.
அதில் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டனர் எனக் கூறியிருந்தார். மேலும் நடிகை திரிஷா குறித்தும் இந்த விவகாரத்தில் தொடர்புப் படுத்தி பேசியிருந்தார்.
இந்த பேச்சுகள் தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் ட்விட்டரில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “இவர்கள் மீது தேவையான, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன். இந்த சட்ட நடவடிக்கைகளை வழக்குரைஞர்கள் குழு பார்த்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
FEFSI அமைப்பு கண்டனம்
இந்த நிலையில் பெப்சி அமைப்பு தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேச காரணங்கள் இருக்கலாம். ஆனால் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை திரையுலகில் உள்ள பெண்கள் மீது தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகைய கீழ்தரமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“