அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்காகவும் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவதற்காகவும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
டிராவல் யூடியூபராக கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் , லடாக் மற்றும் நேபாளத்திற்கு தனது ரூ.11 லட்சம் சூப்பர் பைக்கில் சென்று இளைஞர்களின் மனங்களை கவர்ந்தார்.
அண்மையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் பிறந்தநாள் விழா மீட்டை வாசன் நடத்தியிருந்தார். இந்த நிகழ்வுக்கு கிட்டதட்ட 5000 பேர் வரை வந்திருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அறிந்த போலீஸார் டிடிஎஃப் வாசனை எச்சரித்தனர். இதையடுத்து சென்னை அம்பத்தூரில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்திற்கு வருவதாக யூடியூப்பில் டிடிஎஃப் வாசன் தெரிவித்திருந்ததால் அந்த கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போதும் அங்கு வந்த போலீஸார் இது போல் முன்னறிவிப்பின்றி கூட்டத்தை கூட்டக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் 200 கி.மீட்டருக்கு மேல் வேகமாக செல்கிறார். மேலும் அவர் 245 கி.மீ., 238 கி.மீ. வேகத்தில் பைக்கை ஓட்டி சென்ற காட்சிகளை தனது யூடியூப்பில் வெளியிட்டிருந்தார்.
இவர் இத்தகைய வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் ஆபத்து இவருக்கு இருப்பதை போல் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கும் இருக்கிறது. எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் இவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் , தமிழ்நாடு காவல்துறை, சென்னை டிராபிக் போலீஸ், சென்னை போலீஸுக்கு டேக் செய்து 240 கி.மீ.ருக்கு மேல் வேகமாக செல்லும் யூடியூபர் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போல் அதிகவேகமாக மற்றவர்களும் வாகனங்களை ஓட்டும் நிலை ஏற்படும் என ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். உடனே சென்னை காவல் துறை, உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.