Udhayanidhi Stalin Says Tamil Actor Vijay is 'Thalapathy' of Cinema Industry : சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால், ஒருவேளை தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன். லஞ்சம், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன். தலைவன் ஒழுக்கமாக இருந்தால், மக்களும் ஒழுக்கமாக இருப்பார்கள்… தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. மேலேயிருப்பவர்கள் தவறு செய்யாமல் இருந்தால், கீழே உள்ளவர்கள் தவறு செய்ய வாய்ப்பே ஏற்படாது ” என்று பேசினார்.
பேசிட்டு அவர் பாட்டுக்கு போயிட்டார். ஆனால், அதன்பிறகு ஆளும் தரப்பிலிருந்து விஜய்க்கு கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரோ, "நீங்க நடிக்கிற வேலைய மட்டும் பாருங்க... அரசியல்ல குதிச்சு அடிப்பட்டு போயிடாதீங்க" என்று எச்சரித்தே பேட்டி கொடுத்தார்.
எப்போதும் இளைய தளபதியாக அழைக்கப்பட்டு வந்த விஜய், கடந்தாண்டு ரிலீசான மெர்சல் படம் மூலம் தளபதியாக தன்னை புரமோட் செய்துக் கொண்டார்.
அரசியலில் ஸ்டாலின் தளபதியாக இருந்ததால், இது அப்போதே சர்ச்சையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் செயல் தலைவர் எனும் உயரத்தில் அப்போது இருந்தார். கலைஞர் மறைவுக்கு பிறகு, திமுகவின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால், தளபதி விஜய்க்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், ''விஜயை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர்..பார்த்து செய்யுங்க சார்'' என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்! என்று பதிலளித்துள்ளார்.
ஆக, சினிமாவில் மட்டும் தான் விஜய் 'தளபதி' என்று உதயநிதி சொல்கிறார் போல!