வெள்ளித்திரையைச் சந்திக்க தயாராகுகிறது உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா வாழ்க்கை கதை

உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் மற்றும் கௌசல்யாவின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக உள்ளது.

பல தடைகளை மீறிக் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியர் சங்கர் மற்றும் கௌசல்யா மீது, திடீரென தாக்குதல் நடத்தியது ஒரு கொடூர கும்பல். 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம் ஜோடியை அரிவாள்களைக் கொண்டு வெறியோடு வெட்டிச் சாய்த்தனர். மனைவி கௌசல்யா கண் முன்பே ரத்த வெள்ளத்தில் மடிந்து விழுந்தார் சங்கர். அன்று பலத்த காயங்களோடு உயிர் தப்பினார் கௌசல்யா.

சாதி மறுப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபத்தின் உச்சத்தில் இந்த கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள் கௌசல்யாவின் உறவினர்கள். அதன்பின்பு சங்கர் கொலை வழக்கில் தீவிரமாக போராடிக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், குற்றவாளியான தனது தந்தைக்குத் தூக்கு தண்டனை பெற்றுத் தந்தார்.

மேலும் ஆணவக் கொலையில் உயிரிழந்த தனது காதல் கணவன் சங்கரின் பேரில் சமூகநீதி அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார். அந்த அறக்கட்டளை மூலமாகச் சாதி மதத்தினால் நிகழும் குற்றங்கள் மற்றும் பல்வேறு சம்பவங்களாஇ எதிர்த்து துணிச்சலுடன் போராடி வருகிறார் கௌசல்யா. மேலும் சாதிமறுப்பு திருமணங்களையும் ஆதரித்து நடத்தி வருகிறார் இவர்.

2016 முதல் இன்று வரை மனதில் ஆழமாகப் பதிந்துள்ள இந்தச் சம்பவத்தை மையமாக கொண்டு, சங்கர் மற்றும் கௌசல்யாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக தயாரிக்கும் பணியில் ஒரு குழு இறங்கியுள்ளது.

“மாறாத சமூகம்” என்ற பெயரில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை, பங்கஜ்.எஸ்.பாலாஜி என்பவர் இயக்குகிறார். எஸ்.மணிகண்டன் என்பவர் தயாரிக்கிறார். மேலும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் புது முகங்கள் நடிக்க உள்ளனர். சங்கர் கதாப்பாத்திரத்தில் காதர் என்பவரும், கௌசல்யாவாக திலிஜா என்பவரும் நடிக்கிறார்கள்.

இந்த உண்மை சம்பவத்தில் கௌசல்யாவுக்கு எதிராகப் பல கருத்துகள் இருந்தாலும், அவரின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் இந்தச் செய்தி பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close