ஷாருக் கானின் ஃபேன் (FAN) படத்தில், நடிகராகவே ஷாருக் நடித்திருப்பார். அதில் ஷாருக்கின் ரசிகர் ஒருவர் தான் விரும்பிய நடிகனால் புறக்கணிக்கப்பட்டதால், ஷாருக்கின் மார்க்கெட்டை காலி செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார். இது தான் அப்படத்தின் கதை. நிஜத்தில் அப்படியொரு கதை நடந்தால்... அதில் சல்மான் கானும் இணைந்தால்... அதுதான் இச்சம்பவம்.
இங்கிலாந்தில் உள்ள Companies House தகவலின் படி, டிசம்பர் 28, 2016ல் துவங்கப்பட்ட Bros Brother International Ltd நிறுவனத்தின் தரவுகள் சேகரிக்கப்பட்டதில், அந்த நிறுவனத்துக்கு ஷாருக் கான், சல்மான் கானின் தந்தை சலீம் கான், அவரது சகோதரர்கள் அர்பாஸ் கான் மற்றும் சோஹைல் கான், மற்றும் சல்மானின் Being Human அறக்கட்டளை உட்பட 13 பேர் இயக்குநர்களாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தரவுகளின் படி, இந்த நிறுவனம் பிப்ரவரி 2019ம் ஆண்டு கலைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவன தரவுகளில் ஷாருக் கான் வீட்டின் உண்மையான முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை பாந்த்ராவின் மன்னத் பகுதியில் ஷாருக் கான் இல்லம் உள்ளது. அதேபோல், சலீம் கானின் முகவரியாக, மும்பையின் பேன்ட்ஸ்டேன்ட் அருகேயுள்ள கேலக்ஸி அபார்ட்மென்ட்ஸ் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் முகவரி லண்டன் நைட்ஸ்பிரிட்ஜ் என்று ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலி ஷர்மா என்பவரும் மற்றொரு இயக்குநராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கரண் ஜோஹரின் 'Kuch Kuch Hota Hai' படத்தில் ஷாருக் கான், கஜோல் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அஞ்சலி சர்மா.
"ஏறக்குறைய ஒரு கற்பனையான நிறுவனத்தின் இயக்குநர்களாக அனைத்து இந்திய நடிகர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று பிபிசி இன்வெஸ்டிகேஷன் பிரிவின் தலைவரான பால் மியர்ஸ் கூறினார். இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்கள் குறித்த தனது ஆன்லைன் ஆராய்ச்சியின் போது Bros Brothers இன்டர்நேஷனல் நிறுவனத்தைக் கண்டறிந்தார்.
ஹாம்பர்க்கில் குளோபல் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நெட்வொர்க் (ஜி.ஐ.ஜே.என்) ஏற்பாடு செய்த குளோபல் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் மாநாடு 2019ல் மியர்ஸ் இவ்வாறு பேசினார். இருப்பினும், பாலிவுட் நட்சத்திரங்களின் நற்பெயரையும் அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சல்மான் கானின் அதிகாரப்பூர்வ வணிக மேலாளர் ஜோர்டி படேலைத் தொடர்பு கொண்டபோது, சல்மான் கானும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது அறக்கட்டளைக்கும் அந்நிறுவனத்துடன் தொடர்பில்லை என்று கூறினார். "முதலில் இது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதர்ஸ் பிரதர்ஸ் இன்டர்நேஷனலுடன் எந்த தொடர்பும் இல்லை," என்றார்.
ஷாருக்கானின் வணிக மேலாளரை தொடர்பு கொண்ட போது, அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.