உத்தம வில்லன் படம் தொடர்பாக இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வாநாதன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் நடித்திருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தாயரித்திருந்தது.
2015-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அந்த வரும் வெளியான மிகப்பெரிய தோல்விப்படங்களில் ஒன்றாக மாறியது. இதனால் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இன்னொரு படம் செய்வதாக கமல்ஹாசன் உறுதியளித்திருந்தார்.
ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக கமல்ஹாசன், மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில், கமல்ஹாசன் மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்தியாகிளிட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 'உத்தம வில்லன்' தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் புகார் அளித்தனர். இந்த புகாரில், 2015 வெளியாகி படுதோல்வியை சந்தித்த உத்தம வில்லன் படத்தின் தோல்வியை ஈடுசெய்ய தங்கள் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்திருந்தார். ஆனால் ஒன்பது வருடங்கள் ஆகியும் இன்னும் அவர் கால்ஷிட் கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அனைவரும் தயாரிப்பாளருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இது குறித்து கமல்ஹாசனிடம் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க சம்மதிக்க வைக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா, இல்லையா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.