இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிம்பு..தேவனின் இயக்கத்தில் வடிவேலுவின் அபார நடிப்பில் 2006ம் ஆண்டில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சிம்புதேவனின் படைப்பிலான எந்த ஒரு படமும் வெற்றி பெறவில்லை. 23ம் புலிகேசி கூட்டணி, மீண்டும் இணைந்து படம் பண்ண திட்டமிட்டது. அதற்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரும் இட்டு பணிகளும் துவங்கப்பட்டன. இந்நிலையில், நடிகர் வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, படப்பிடிப்பு பலநாட்களாக நடைபெறவில்லை. இதன்காரணமாக, தயாரிப்பாளர் ஷங்கருக்கு பொருளாதார ரீதியில் பயங்கர இழப்பு ஏற்பட்டது. வடிவேலுவிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
தயாரிப்பாளர் சங்கம், இவ்விவகாரத்தில் தலையிட்டும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து, வடிவேலு, படங்களில் நடிக்க தடை பிறப்பித்து வாய்மொழி உத்தரவாக ரெட் கார்டு போடப்பட்டது.
இதனால் கோபமடைந்த வடிவேலு, பேட்டியொன்றில், இயக்குனர் ஷங்கர் குறித்து கடுமையாக பேசியிருந்தார். இதுதொடர்பாக, சட்டரீதியான நடவடிக்கைகளையும் ஷங்கர் எடுக்க முற்பட்டார். விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததே தவிர, தணிந்தபாடில்லை.
இதனிடையே, இவ்விவகாரத்தில் மூத்த தயாரிப்பாளரின் தலையீட்டால், சுமுக தீர்வுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் கைவிடப்படுகிறது. ஷங்கர் அடைந்த நஷ்டத்திற்கு பதிலாக, அவரது 2 படங்களில் சம்பளம் வாங்காமல் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடிவேலு மீண்டும் நடிக்க இருப்பதை பார்க்க ஆவலாக இருக்கும் கோடானகோடி ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை