தமிழ் சினிமாவின் காமெடி கிங் மீம்ஸ்களில் மன்னன் நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளில், ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது, தனக்கு இருந்த பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைத்து என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் ஜி.கே. மணி மகன்தான் என்று நெகிழ்சியாக கூறினார்.
தனது நகைச்சுவையால் மக்களை ஓயாமல் சிரிக்க வைத்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு, கடந்த பத்தாண்டுகளில் விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தார். இதற்கு காரணம், அவருடைய படம் சில பிரச்னைகளில் சிக்கியதால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை இருந்தது.
நடிகர் வடிவேலு
இதனிடையே, வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டதாகவும் அவர் 5 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வைகைப்புயல் வடிவேலுவின் 60வது பிறந்த நாளில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
வடிவேலு தனது பிறந்தநாளை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு இருந்த பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைத்து என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் ஜி.கே. மணி மகன்தான் என்று கூறினார்.
நடிகர் வடிவேலு ஊடகங்களிடம் பேசியதாவது: “இன்று முழுவதும் மக்களுடைய ஆசீர்வாதம், வாழ்த்து எனக்கு நிறைய கிடைத்தது. திரையுலகில் இருந்து சுபாஷ்கரண் என்னை நிறைய வாழ்த்தினார். வடிவேல் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும். நிறைய படம் பண்ணணும் என்று சுபாஷ்கரண் வாழ்த்தினார். இன்னொரு விஷயத்தைப் பற்றி சொல்லணும். இந்த படத்தில் இந்த அளவுக்கு பிரச்னைகளை முடித்து கொண்டு வந்து நிப்பாட்டினது தமிழ்க்குமரன் அவர்கள். தமிழ்க்குமரன் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் ஜி.கே.மணியின் தவப்புதல்வன். அவர்தான் லைக்காவில் சிஇஓ-வாக இருக்கிறார். இவ்வளவு பிரச்னைகளையும் எனக்கு சரி பண்ணி கொடுத்து, நானும் சுபாஷ்கரண் எல்லாம் சேர்ந்து பிரச்னைகளை சரி பண்ணி இயக்குனரை தேர்வு செய்து இந்த படத்தை அறிவித்திருக்கிறோம். அதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், சுபாஷ்கரண் வாழ்த்தியது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதே மாதிரி உதயநிதி பேசி வாழ்த்தினார். நிறைய பேர் போன் செய்து வாழ்த்தினார்கள்.” என்று கூறினார்.
செய்தியாளர்கள், ரசிகராக ஒரு கேள்வி, இனிவரும் திரைப்படங்களில் உங்கள் இனிமையான குரலில் ஏதாவது பாடல்கள் பாடுவீங்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, நடிகர் வடிவேலு, “கண்டிப்பாக இந்த படத்திலேயே ஒரு பாடல் பாடுகிறேன்.” என்று கூறினார். இதையடுத்து, இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார் என்று கூறினார்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, இதில் சந்தோஷம் என்னன்னா, இசை சந்தோஷ் நாராயணன் சார் இருந்தா நல்லா இருக்குமே என்று சிஇஓ தமிழ்குமரனிடம் சொன்னேன். சொன்ன உடனே போன் பண்ணார். இசையில் இன்றைக்கு அவர் பெரிய ஆளாக இருக்கிறார். அவர் போன் எடுத்த உடனே, எங்கே என் தலைவன் எங்கே, வடிவேல் எங்கே இருக்கிறார் முதலில் சொல்லுங்க, அவர்கிட்ட போனை கொடுங்க, முதலில் அவருக்கு பண்றதுதான் என்னுடைய முதல் வேலை. தலைவா தலைவானு பேசினதும் எனக்கு ஒண்ணுமே புரியல, அவர் பேசியது அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. சந்தோஷ் நாராயணம் பேசியதை கேட்டபோது எனக்கு சந்தோஷம் பொங்கிவிட்டது. ஒரு பிஸியான மியூஸிக் டைரக்டர் கேட்கிறார் என்றால் எனக்கு அது பெரிய விஷயம். உங்க நகைச்சுவைக்கு நான் ரொம்ப அடிமை. உங்க படத்துக்கு அதுவும் லைக்காவில் பண்ணுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார் என்று கூறினார்.
முன்னதாக, இந்த பிறந்தநாள் புதிதாக பிறந்ததுபோல் உள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“