Vairamuthu | Ilayaraja: நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வைரமுத்து பேச்சு
இந்த விழாவில் பேசிய வைரமுத்து, "ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் அது பாட்டு. சில நேரங்களில், இசை சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப்புரிந்து கொண்டவன் ஞானி. இதைப்புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி." என்று தெரிவித்தார்.
விமர்சனம்
வைரமுத்து பேசியது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவர் இளையராஜாவை விமர்சித்து தான் அவ்வாறான கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு பகிரங்ககமாக எச்சரித்த இசையமைப்பாளரும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், வைரமுத்துவை கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் கங்கை அமரன், "வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்லவர் இல்லை. தடுக்க ஆள் இல்லாததால் இப்படி செய்கிறார். இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது." என்று கூறினார்.
சீண்டி வைரமுத்து
கங்கை அமரன் வைரமுத்துவை சாடி வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிய நிலையில், மீண்டும் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக சீண்டி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது எழுத்தில் இளையராஜா இசையில் வெளியான 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' படத்தில் இடம் பெற்ற 'மனிதா மனிதா' பாடலை குறிப்பிட்டு மே முதல் நாளாம் உழைப்பாளர் தின வாழ்த்துடன் சேர்த்து இளையராஜாவை மறைமுகமாக சீண்டியிருக்கிறார் வைரமுத்து.
இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிதையில்,"உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள். அந்த உழைப்பு உரிமை பெற்றநாள் இந்த நாள். தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும் குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்குரியவர்கள். இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை. எழுத்து வைரமுத்து. இசை இளையராஜா. குரல் ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல, உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்" என்று அவர் பதிவிட்டார்.
முற்றும் முன்னாள் நண்பர்களின் யுத்தம்
இந்த நிலையில், தற்போது வைரமுத்து தனது புதிய சமூக வலைதள பதிவில் மீண்டும் ஒரு முறை இளையராஜா குறித்து மறைமுகமாக சாடியுள்ளார். அந்தப் பதிவில், குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், புயல் வீசத் தொடங்கிவிட்டால், ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் இளையராஜாவுக்கும் தனக்கும் இடையிலான கருத்து வேறுபாடு விவகாரத்தில் மக்கள் தனக்காக பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாக வைரமுத்து சூசகமாக பதிலளித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு இணையவாசிகள் கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குயில்
— வைரமுத்து (@Vairamuthu) May 4, 2024
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.