பிரஜின், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல். அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி என்று கவிஞர் வைரமுத்து பேசியிருப்பது, இசைஞானி இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக விமர்சித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
தமிழி திரையிலில் 4 தலைமுறை இசையமைப்பாளர்ளின் போட்டிகளைக் கடந்து இன்றும் புத்தம் புது இசையை அளித்துக்கொண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ஆயிரக் கணக்கான பாடல்களை இசையமைத்த இசைஞானி இளையராஜா, இன்றைக்கும் 2கே கிட்ஸ்களையும் தனது இசைக்கு தாளம் போட வைத்து இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
இளையராஜா மீது அவருடைய அரசியல் கருத்துகளுக்காக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், அவர் தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமையைக் கேட்பதற்காக விமர்சிக்கப்படுகிறார்.
வெளிநாடுகளில், இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களுக்கு காப்புரிமை பெற்றிருப்பது போல, தன்னுடைய பாடல்களுக்கு தனக்கு மட்டுமே சொந்தமானது என காப்புரிமை கேட்கிறார். அதே நேரத்தில், திரை இசை பாடல் என்றால், பாடல் வரிகளும் சேர்ந்ததுதான் அதனால், பாடல் ஆசிரியர்களுக்கும் அந்த பாடலில் காப்புரிமை வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், “இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல். அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி” என்று வைரமுத்து பேசியிருப்பது, அவர் மறைமுகமாக இளையராஜாவை விமர்சித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
யாஷிகா ஆனந்த், பிரஜின் நடிப்பில் உருவாகி உள்ள படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய வைரமுத்து, அந்த படத்தில் தான் ஒரு சரக்குக்கு எதிரான பாடலை எழுதியிருப்பதாக கூறினார்.
"மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன
44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன
20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது
30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது
ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது
ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்
மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்
இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்" என அதுதொடர்பாக ஒரு ட்வீட்டையும் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
மேலும், “இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும் என்றும் ஒருவரை பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம். வெறும் இசை மட்டுமே இருந்திருந்தால் அந்த பாடலை அடையாளம் காண முடியுமோ?
காலம் கடந்தும் பாடல்கள் நிற்பதற்கு காரணம் இசை மட்டும் தானா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை எந்தவொரு இசையும் இல்லாமல் பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு உள்ளிட்ட பல கவிஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கருத்துள்ள பாடல் வரிகளை கொடுத்து காலம் கடந்தும் நிற்கின்றனர் எனக் கூறினார். இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல். அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி” என்று வைரமுத்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். குபேரன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் விரைவில் இளையராஜா பயோபிக் படத்தில் இணையவுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.