நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவரது மகள் ஜோவிகா கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக வனிதா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த செய்தியோடு, தனது மகள் பெயருக்குப் பின்னால் 'விஜயகுமார்' என்ற பெயரைச் சேர்த்தது குறித்தும் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கும் வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி திருமணம், குடும்பம், குழந்தை என செட்டில் ஆனார். வனிதாவின் திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அவரது தந்தை விஜயகுமார் குடும்பத்துடன் அவருக்கு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறது. தனி ஆளாக தனது மகளை வளர்த்து வரும் வனிதாவுக்கு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.
சில வருடங்களுக்கு முன்பு விஜயகுமாருடன் வனிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா, பிக் பாஸ் வீட்டிற்குள் போட்ட சண்டை நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-யை எகிற வைத்தது. அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவரைத் தேடி போலீஸ் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது வனிதா சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஜோவிகா தன்னுடைய தயாரிப்பில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' என்ற திரைப்படத்தில் தனது தாய் வனிதாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், அதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் வனிதா இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
வனிதா விஜயகுமார் பேசுகையில், "என்னுடைய மகள் ஜோவிகா ஹீரோயின் ஆகிறாள். அவள் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறாள். தெலுங்கு சினிமாவைப் பின்பற்றுபவர்களுக்கு சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன் நன்கு தெரிந்திருக்கும். அவர்கள் தெலுங்கு சினிமாவில் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்கள். ஒக்கடு, வருஷம், தேவி போன்ற படங்களை தயாரித்தது அந்த நிறுவனம்தான். அவர்கள் இதுவரைக்கும் சூப்பர் ஹிட் படங்களை மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறது." என்று நெகிழ்ச்சியோடு வனிதா தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றும், மிக வலிமையான, அழகான கதாபாத்திரத்தில் ஜோவிகா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் வனிதா கூறினார். முதலில் இந்த செய்தியை அவர்கள்தான் சொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இப்போது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை சொல்லும்படி கேட்டுக்கொண்டதாகவும் வனிதா தெரிவித்தார். அம்மாவும் கதாநாயகியாக நடிக்கும் நேரத்தில் மகளும் கதாநாயகியாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் பலர் சினிமா துறையில் உள்ளனர். அந்த வரிசையில் இப்போது வனிதாவின் மகள் ஜோவிகாவும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரியும் புதியதாக ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றி சில மாதங்களுக்கு முன்பு வனிதா பேசுகையில், "என்னுடைய மகனும் கதாநாயகனாக நடிக்கும்போது நானும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இது யாரும் செய்யாத சாதனைதான்" என்று கூறியிருந்தார்.
மேலும், வனிதா தனது மகள் ஜோவிகா பெயருக்குப் பின்னால் 'விஜயகுமார்' என்ற பெயரைச் சேர்த்திருப்பது குறித்தும் பேசியிருந்தார். அதில், தனது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தபோது ஜோவிகா வயிற்றில் இருந்ததாகவும், அப்போது தனது அப்பாதான் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி தன்னை மற்றும் குழந்தையை காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். அதனால், தனக்கு அந்த நேரத்தில் தனது அப்பாவின் பெயரை தனது குழந்தையின் பெயருக்குப் பின்னால் பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியதாகவும், அதனால்தான் ஜோவிகா விஜயகுமார் என்று வைத்திருக்கிறேன் என்றும் வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.